தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் தந்தை, மகன் மரணமடைந்தது குறித்து உயர் நீதிமன்றம் மதுரைக்கிளை தாமாக முன்வந்து விசாரணைக்கு ஏற்றது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, சாத்தான்குளத்தில் தந்தை, மகன் மரணமடைந்த சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு மாற்ற அனுமதி கேட்டு தமிழ்நாடு அரசு சார்பில் முறையீடு செய்யப்பட்டது.
இதைக் கேட்ட நீதிபதிகள், தந்தை, மகன் மரணம் தொடர்பாக சிபிஐக்கு மாற்றுவதாக இருந்தால் மாற்றுங்கள். அது தமிழ்நாடு அரசின் கொள்கை முடிவு.
அரசின் கொள்கை முடிவுக்கு நீதிமன்ற அனுமதி தேவையில்லை என்று கருத்துத் தெரிவித்துள்ளனர். மேலும், தந்தை, மகன் இறப்பு குறித்த விசாரணைக்கு காவல் துறை போதிய ஒத்துழைப்பு வழங்கவில்லை என்று தெரிகிறது. எனவே, சாத்தான்குளம் காவல் நிலையத்தை தூத்துக்குடி ஆட்சியர் கட்டுப்பாட்டில் கொண்டுவர வேண்டும்.
தடயவியல் அலுவலர்கள் சாத்தான்குளம் காவல் நிலையத்துக்குச் சென்று ஆவணங்களைச் சேகரிக்க வேண்டும். தந்தை, மகன் மரணத்தில் உரிய நீதி வழங்கப்பட வேண்டும் என்பதற்காகவே, நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கு விசாரணைக்கு ஏற்றது.
விசாரணையை நீதிமன்றம் தொடர்ந்து கண்காணிக்கும், ஆவணங்களைச் சரிபார்க்கும் என்று நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்