மதுரை : வழக்கறிஞர் முத்துக்குமார் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில்,” தமிழ்நாட்டில் போலி வழக்கறிஞர்கள் அதிக அளவில் பெருகிவிட்டனர். ஆந்திரா, கர்நாடகா உள்பட பல்வேறு மாநிலத்தில் சட்டம் பயின்றதாகக் கூறி போலி வருகை சான்றிதழ் பெற்று வக்கீல்களாக பதிவு செய்து விடுகின்றனர்.
இதனைத் தடுக்கும் விதமாகத் தமிழ்நாடு அரசு கூடுதல் சட்டக் கல்லூரிகளைத் தொடங்கியுள்ளது. மேலும், பி.எல்.ஹானர்ஸ் படிப்பும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இருந்தபோதும் வெளிமாநிலங்களில் சட்டப்படிப்பு படித்ததாகக் கூறி தமிழ்நாடு புதுச்சேரி பார் கவுன்சில் பதிவு செய்து வருகின்றனர்.
எனவே வெளி மாநிலங்களில் சட்டப் படிப்பு படித்தவர்கள் பார் கவுன்சில் வழக்கறிஞர் பதிவு செய்யும் முன்பு அவர்களைப் பற்றிய உண்மைத் தன்மையை ஆராய வேண்டும். அவர்கள் உண்மையில் வெளி மாநிலத்திற்குச் சென்று படித்தார்களா என்றும், அவர்கள் தங்கிப் படித்ததற்கான வாடகை ஒப்பந்தப் பத்திரம், கல்லூரி வருகை சான்றிதழ் ஒப்படைக்க வேண்டும்.
மேலும் காவல் துறை உதவி கமிஷனர், டி.எஸ்.பி அந்தஸ்திற்குக் குறையாத அலுவலர் விசாரணை செய்து சான்றிதழ் அளிக்க வேண்டும் என்ற புதிய விதிகளை உருவாக்க உத்தரவிட வேண்டும்” என மனுத்தாக்கல் செய்து இருந்தார்.
இந்த வழக்கு நேற்று (ஆக.12) நீதிபதிகள் துரைசாமி, ஆனந்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. விசாரணை செய்த நீதிபதிகள் மனு குறித்துப் பார் கவுன்சில், தமிழ்நாடு காவல்துறைத் தலைவர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்திவைத்தனர்.
இதையும் படிங்க: கார் நுழைவு வரி வழக்குகளை கண்டறிய வாட்ஸ் அப் குழு உருவாக்கம் - தமிழ்நாடு அரசு