மதுரை மாநகர காவல் துறை ஆணையராகவும் அண்மையில் ஏடிஜிபியாக பதவி உயர்வு பெற்று மீண்டும் மதுரை காவல் ஆணையராகவும் டேவிட்சன் தேவாசீர்வாதம் பொறுப்பு வகித்துவருகிறார்.
அவர் மதுரைக்கு பொறுப்பேற்றது முதல் பொதுமக்களின் குறைகளை நேரடியாக கேட்டறிந்து அதுகுறித்து உடனுக்குடன் நடவடிக்கை எடுப்பதற்காக மதுரை மாநகர காவல் துறை என்ற பெயரில் முகநூல் பக்கம் தொடங்கப்பட்டு நிர்வகிக்கப்படுகிறது.
அதில் பொதுமக்களுக்கான காவல் துறையின் திட்டங்கள் செயல்பாடுகள் ஆகியவை அவ்வப்போது பதிவிடப்பட்டு வருகின்றன. இந்த முகநூல் பக்கம் மதுரை மாநகர காவல் துறையின் செயல்பாடுகள் குறித்து பொதுமக்கள் அறிந்து கொள்வதற்கு வாய்ப்பாக அமைந்துள்ளது.
இந்நிலையில் மதுரை காவல் ஆணையர் டேவிட்சன் தேவாசீர்வாதம் பெயரில் போலியாக முகநூல் கணக்கு ஒன்று தொடங்கப்பட்டு, காவல் ஆணையர் பேசுவதைப் போன்று அடையாளம் தெரியாத நபர் ஒருவர் பொதுமக்களிடம் பேசி வருவதாக குற்றச்சாட்டு எழுந்தது. அதனைத் தொடர்ந்து காவல் துறையினர் நடத்திய விசாரணையில் அந்த நபர் அமெரிக்காவிலிருந்து இந்தக் கணக்கை தொடங்கிய விவரம் தெரிய வந்தது.
அதையடுத்து பேஸ்புக் நிர்வாகத்திடம் மதுரை மாநகர காவல் துறை தரப்பில் புகார் தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து அந்தப் பக்கம் தற்போது முழுமையாக முடக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மதுரை மாநகர காவல் துறை ஆணையர் டேவிட்சன் தேவாசீர்வாதம் தன்னுடைய முகநூல் பக்கத்தில் தன்னை போன்று அடையாளம் தெரியாத நபர் ஒருவர் போலியான கணக்கில் பேசி வருகிறார்கள். அதனை யாரும் நம்ப வேண்டாம் என பதிவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: ரயில் நிலையம் நோக்கி நடந்த வடமாநில தொழிலாளர்கள் - திருப்பி அனுப்பிய போலீஸார்