மதுரை: தமிழர்களின் பண்பாட்டு பாரம்பரியமாகத் திகழும் ஜல்லிக்கட்டு, சுமார் 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு சிந்து சமவெளியிலேயே நிகழ்ந்ததற்கான தொல்லியல் சின்னங்கள் கிடைத்துள்ளன. பண்டைத் தமிழ் இலக்கியங்களில் 'ஏறு தழுவுதல்' என்னும் பெயரில் ஜல்லிக்கட்டு என்ற வீர விளையாட்டு குறிப்பிடப்பட்டுள்ளது.
'கொல்லேற்றுக் கோடஞ்சுவானை மறுமையும் புல்லாளே ஆய மகள்' என கலித்தொகை ஏறு தழுவுதல் குறித்து குறிப்பிட்டுக் கூறுகிறது. 'கொல்ல வரும் காளையின் கொம்புக்கு அஞ்சுபவனைத் தமிழ் பெண் மறு பிறப்பில் கூட மணக்க விரும்ப மாட்டாள்' என்பது இந்தப் பாடலின் பொருளாகும். அந்த அளவிற்கு ஏறு தழுவுதல் தமிழர்களின் மரபில் ஒன்று கலந்துள்ளது.
இந்த நிலையில், இதனை விலங்கு வதை என்னும் அடிப்படையில், பீட்டா உள்ளிட்ட பல்வேறு விலங்கு நல அமைப்புகள் நீதிமன்றத்தை நாடி தடை பெற்றன. ஜல்லிக்கட்டு போட்டிக்கு எதிரான தடையை ரத்து செய்யக் கோரி கடந்த 2016 ஆம் அண்டு டிசம்பர் மற்றும் 2017 ஜனவரியில் மிகப் பெரும் போராட்டம் தமிழ்நாட்டில் வெடித்தது.
குறிப்பாக, சென்னை மெரினா கடற்கரை, மதுரை அவனியாபுரம், அலங்காநல்லூர், தமுக்கம் மைதானம், செல்லூர் ரயில்வே மேம்பாலம் என தமிழ்நாடு முழுவதும் இளைஞர்களும், பொதுமக்களும் லட்சக்கணக்கில் ஒன்று திரண்டு போராட்டம் நடத்தினர். இதனையடுத்து அப்போதைய முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான தமிழ்நாடு அரசு, சட்டசபையை அவசர அவசரமாகக் கூட்டி ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான சட்டத் திருத்தத்தை மேற்கொண்டது.
இதற்கு மத்திய அரசும் ஒப்புதல் அளித்தது. தொடர்ந்து, அன்றைய தினத்தில் இருந்து ஜல்லிக்கட்டு தடையின்றி நடைபெற்று வந்தாலும், தமிழ்நாடு அரசின் சட்டத் திருத்தம் செல்லாது என அறிவிக்கக் கோரி, மீண்டும் அதற்கு எதிரான அமைப்புகள் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தன.
அந்த வழக்கில் பல கட்ட விசாரணைகள் நடைபெற்று, கடந்த மே 18 ஆம் தேதி உச்ச நீதிமன்றத்தில் 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு, தமிழ்நாடு அரசின் சட்டத் திருத்தத்திற்கு அனுமதி அளித்தது. இதனை தமிழ்நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் இனிப்பு வழங்கி பொதுமக்கள் கொண்டாடினர்.
அதேநேரம், இந்தப் போராட்டம் நடைபெற்றபோது அதில் ஈடுபட்டு சமூக அமைதிக்கு குந்தகம் விளைவித்தார்கள் என்பதுடன், மேலும் பல்வேறு பிரிவுகளில் போராட்டக்காரர்கள் மீது காவல் துறை வழக்குப் பதிவு செய்தது. அந்த வழக்கிற்காக கடந்த 7 ஆண்டுகளாக தமிழ்நாடு முழுவதும் சற்றேறக்குறைய ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் நீதிமன்றப் படியேறி வருகின்றனர்.
அந்த வழக்குகளை தள்ளுபடி செய்யக் கோரி தொடர்ந்து அவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். அது மட்டுமல்லாமல், ‘ஜல்லிக்கட்டு போராட்ட வழக்கு முறியடிப்புக்குழு’ என்ற பெயரில் இயங்கி வரும் இவர்கள், இதற்காக கடந்த 2021ஆம் ஆண்டு ஜனவரியில் மாநாடு நடத்தி தமிழ்நாடு அரசின் கவனத்திற்கும் கொண்டு சென்றனர்.
மேலும், இது குறித்து ஜல்லிக்கட்டு போராட்ட வழக்குகள் முறியடிப்புக் குழுவைச் சார்ந்த கம்பூர் செல்வராஜ், குமரன், அண்ணாமலை மற்றும் ரவி ஆகியோர் ஈடிவி பாரத் தமிழ்நாடு செய்திகளுக்கு பிரத்யேக பேட்டி ஒன்றையும் அளித்துள்ளனர். அப்போது பேசிய அவர்கள், "இதுநாள் வரை எங்களது கோரிக்கைக்கு தமிழ்நாடு அரசோ, தமிழ்நாடு காவல் துறையோ எந்த வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை.
இந்த நிலையில் போராட்டத்தின் குவிமையமாக இருந்த பகுதிகளில் நடைபெற்ற போராட்டங்கள் குறித்து விசாரிக்க, வழக்கு சிபிசிஐடி பிரிவுக்கு மாற்றம் செய்யப்பட்டது. மதுரை, சென்னை, கோயம்புத்தூர் மற்றும் சேலம் என நான்கு மாவட்டங்களைச் சேர்ந்த 150க்கும் மேற்பட்டவர்கள் மீது சிபிசிஐடி வழக்குப் பதிவு செய்தது.
கடந்த அதிமுக ஆட்சியில் தேர்தலுக்கு முன்பாக பொதுமக்கள் மீது சட்டம் ஒழுங்கு காவல் துறையினரால் போடப்பட்ட வழக்குகள் திரும்பப் பெறப்பட்டன. ஆனால், சிபிசிஐடி பிரிவால் தொடுக்கப்பட்ட வழக்குகள் இன்னும் விசாரணையில் உள்ளன. மதுரை மாவட்டத்தில் மட்டும் ஆறு பிரிவுகளின் கீழ் வழக்குகள் பல்வேறு நபர்கள் மீது பதியப்பட்டுள்ளன.
மனித உரிமை வழக்கறிஞர்கள் வாதாடி, அவற்றில் 2 வழக்குகளில் இருந்து விடுதலை பெற்றுத் தந்துள்ளனர். தற்போது உச்ச நீதிமன்றத்தின் ஜல்லிக்கட்டு தீர்ப்பு குறித்து சொந்தம் கொண்டாடும் அனைத்து அரசியல் கட்சிகளும், எங்களின் கோரிக்கை குறித்து கவனம் கொடுக்க மறுப்பது ஏன் என்பது தெரியவில்லை.
அது மட்டுமன்றி, இதற்காக தமிழ்நாடு அரசால் நியமிக்கப்பட்ட ஓய்வு பெற்ற நீதியரசர் ராஜேஸ்வரன் தலைமையிலான ஒரு நபர் ஆணையமும் தனது விசாரணையை நிறைவு செய்து தமிழ்நாடு அரசுக்கு அறிக்கையையும் சமர்ப்பித்துள்ளது. அந்த அறிக்கையும் இதுவரை வெளியிடப்படவில்லை.
இந்த வழக்குகளால் மாணவர்கள், முதியோர்கள், நோயாளர்கள் மற்றும் பணி செய்வோர் என பலரும் பாதிக்கப்பட்டு கடும் மனச் சிக்கலில் உள்ளனர். இந்த வழக்குப் பதிவு செய்யப்பட்டதோடு, இதுவரை அடுத்த கட்டத்திற்கு கூட நகரவில்லை. அப்படியே கிணற்றில் போட்ட கல்லாக இருக்கிறது.
விசாரணைக்காக பல்வேறு மாவட்டங்களில் இருந்து வருகின்ற நபர்களுக்கு, பொருளாதார இழப்பும் கடுமையாக உள்ளது. ஆகையால், இதனையெல்லாம் கருத்தில் கொண்டு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், எங்கள் மீது உள்ள ஜல்லிக்கட்டு தொடர்பான அனைத்து வழக்குகளையும் தள்ளுபடி செய்து அறிவிக்க வேண்டும்.
உச்ச நீதிமன்றத் தீர்ப்பு வரும்போதே முதலமைச்சர் அறிவிப்பார் என மிகவும் எதிர்பார்த்திருந்தோம். இனியும் தாமதம் செய்யாமல் தமிழ்நாடு அரசு, வழக்குகள் அனைத்தையும் வாபஸ் பெற வேண்டும்" என தெரிவித்தனர்.
இதையும் படிங்க: ஜல்லிக்கட்டு போராட்டக்காரர்கள் மீதான வழக்கை அரசு வாபஸ் பெற வேண்டும் - சு.வெங்கடேசன் எம்.பி.