மதுரை: கடந்த சில வாரங்களாக மணிப்பூர் மாநிலத்தில் மிகக் கடுமையான போராட்டம் நடைபெற்று வருகிறது. இதனையடுத்து அங்குள்ள பழங்குடி சமூகப் பெண்களை நிர்வாணமாக்கி சமூக விரோத கும்பல் நடத்திய வெறியாட்டம், இந்தியா முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அந்தக் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலானதை அடுத்து, பிரதமர் மோடி இச்செயலைக் கடுமையாக கண்டித்துள்ளார்.
இதற்கிடையே மணிப்பூர் கலவரத்தை முடிவுக்கு கொண்டு வர வலியுறுத்தியும், பெண்களை நிர்வாணமாக்கி கொடுமை செய்த நபர்களை கைது செய்யவும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவு தெரிவித்தும் தமிழ்நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில், மதுரை அருகே உள்ள ஒத்தக்கடை யானைமலையில் இன்று (ஜூலை 21) காலை திடீரென நூற்றுக்கும் மேற்பட்டோர் ஏறி அங்கிருந்தவாறே மணிப்பூர் கலவரத்தைக் கண்டித்து போராட்டம் நடத்தத் தொடங்கினர். யானைமலை அடிவாரத்தில் எவர்சில்வர் பட்டறைகள் நிறைந்துள்ளன.
இந்த பட்டறைகளில் பணியாற்றும் தொழிலாளர்கள் ஒன்றிணைந்து மலை மீது ஏறி போராட்டம் நடத்தினர். இதனால் இந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. காலையில் 10 மணியளவில் மலை மீது ஏறிய போராட்டக்காரர்கள் சுமார் 1000 அடி உயரமுள்ள பகுதிக்குச் சென்று அங்கிருந்தவாறே மத்திய அரசைக் கண்டித்தும், பாதிக்கப்பட்ட மணிப்பூர் மாநில மக்களுக்கு ஆதரவைத் தெரிவித்தும் முழக்கங்கள் எழுப்பினர்.
இந்தப் போராட்டத்தில் எவர்சில்வர் பட்டறை தொழிலாளர்கள் மட்டுமன்றி உள்ளூரைச் சேர்ந்த பொதுமக்களும் ஆதரவு தெரிவித்து மலை மீது ஏறி போராட்டம் நடத்தினர். இந்த போராட்டம் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக தொடர்ந்தது. இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.
இதனை அடுத்து, போராட்டம் நடைபெறும் இடத்திற்குச் சென்ற ஒத்தக்கடை காவல் துறையினர், போராட்டத்தை கைவிட்டு மலையில் இருந்து இறங்கி வருமாறு போராட்டக்காரர்களுக்கு வேண்டுகோள் விடுத்தனர். செங்குத்தான மலைப்பகுதி என்பதால், எந்தவித அசம்பாவிதங்களுக்கு இடம் பெறாமல் அவர்களோடு தொடர்ந்து காவல் துறையினர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
மதுரை மாவட்ட நிர்வாகத்திற்கும் தமிழ்நாடு அரசிற்கும் தங்களது போராட்டத்தின் நோக்கத்தை தெரியப்படுத்த வேண்டும் என காவல் துறைக்கு கோரிக்கை வைத்தனர். இதன் முடிவில் போராட்டக்காரர்கள் காவல் துறையின் வேண்டுகோளை ஏற்று தங்கள் போராட்டத்தைக் கைவிட்டு மலையிலிருந்து கீழே இறங்கினர்.
இதேபோல், சென்னை மீனம்பாக்கத்தில் கல்லூரி மாணவர்கள் இன்று சேர்ந்து ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து, மணிப்பூர் கலவரத்தை கண்டித்து முழக்கங்களை எழுப்பினர். பின்னர், ரயில்வே காவல் துறையினர் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.
இதையும் படிங்க: சிட்டிசன் பட பாணியில் ஊர் பெயரை காப்பாற்ற போராடும் மக்கள்.. தென்காசியில் நடப்பது என்ன?