மதுரை: வலையங்குளம் பகுதியில் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில், டாக்டர் சரவணன் தலைமையில் 10,000 பேர் அதிமுகவில் இணையும் நிகழ்ச்சி நடைபெற்றது.
அப்போது பேசிய எடப்பாடி பழனிசாமி, “இணைப்பு விழாவில் பங்கேற்பவர்களுக்கு நன்றி. அதிமுக எழைகளுக்கு உதவி செய்யும் கட்சி. திமுக குடும்ப ஆட்சி செய்து வருகிறது. கமிஷன், கரப்ஷன், கலெக்ஷன் என திமுக உள்ளது. திமுக அரசு 90 சதவீத அறிவிப்பை நிறைவேற்றியதாக பொய் கூறுகின்றனர். திமுக அமைச்சர்கள் பொய் கூறுகின்றனர். எடப்பாடி பழனிசாமி ஊழலை பற்றி பேசக் கூடாது என கூறுகின்றனர். திமுக ஊழலின் ஊற்றுக்கண்ணாக உள்ளது.
இந்தியாவில் ஊழலுக்காகக் கலைக்கப்பட்ட ஆட்சி, திமுக. திமுகவில் ஆட்கள் இல்லை. திமுகவில் இருக்கும் 8 அமைச்சர்கள், அதிமுகவிலிருந்து சென்றவர்கள்தான். திமுகவிற்கு உழைத்தவர்கள் வயது முதிர்ந்து இருக்கின்றனர். திமுக நம்மைப் பற்றிப் பேச அருகதையில்லை. அதிமுக 33 ஆண்டுக் காலம் ஆட்சி செய்தது.
ஏழைகள் உயர்வு, கல்வி முன்னேற்றம் அதிமுக ஆட்சியில்தான் நடைபெற்றது. கடந்த 2011 திமுக ஆட்சியில் 100க்கு 32 பேர் உயர் கல்வி படித்த நிலையில், அதை 100க்கு 52 ஆக நாம் உயர்த்தினோம். பல உயர் கல்வி நிறுவனங்கள், கல்லூரிகள் ஏற்படுத்தப்பட்டது அதிமுக ஆட்சியில்தான். மதுரையில் பல திட்டங்களை திமுக முடக்கி உள்ளது.
மதுரை வைகை ஆற்றில் இருபுறமும் சாலைகள் அமைப்பது முடக்கப்பட்டுள்ளது. நாங்கள் உருவாக்கிய திட்டத்தில் சிலவற்றைத்தான் ஸ்டாலின் ரிப்பன் கட் செய்து வருகிறார். அதிமுக, தைப் பொங்கலுக்கு 2,500 ரூபாய் கொடுத்தோம். தற்போது 1,000 ரூபாயை போராடி பெற வேண்டியதாக இருக்கிறது. கரும்பு தர மறுத்தனர்.
அதையும் போராடிப் பெற வேண்டி இருந்தது. இதற்குத் தேர்தலில் மக்கள் பதிலடி கொடுப்பார்கள். கவர்ச்சித் திட்டம் அறிவித்து திமுக மக்களை ஏமாற்றுகின்றனர். அதிமுக பொங்கலுக்கு 2,500 ரூபாய் கொடுக்கும்போது. 5,000 ரூபாய் கொடுக்க வேண்டும் என திமுக எதிர்கட்சியாக இருக்கும்போது கூறினார்கள். தற்போது முதலமைச்சராக இருந்து கொண்டு 5,000 ரூபாய் கொடுக்கவில்லை.
திமுக, கடந்த பொங்கல் தொகுப்பில் 21 பொருட்களை வெளி மாநிலத்திலிருந்து கொடுத்தனர். அதில் 500 கோடி ஊழல் நடந்துள்ளது. பொங்கல் தொகுப்பில் சர்க்கரை கரைந்து ஓடியது. புளியில் பல்லி, அரிசியில் வண்டு இருந்தது. நமது மாநிலத்தில் பொருட்களை வாங்கினால் ஊழல் செய்ய முடியாது. அதனால் வெளி மாநிலத்தில் இருந்து பொருட்கள் வாங்கினார்கள்.
சொத்து வரி, சாக்கடை வரி, மின்சார வரி பல மடங்கு உயர்த்தியுள்ளனர். கரோனா தொற்றில் மதுரையில் அதிமுகவினர் சிறப்பாகச் செயல்பட்டார்கள். அம்மா உணவகத்தில் இலவச சாப்பாடு, மருத்துவ வசதிகள் என அனைத்தும் சிறப்பாகச் செய்தனர்” என்றார்.
இதையும் படிங்க: "யோக்கியன் வாரான் செம்பை தூக்கி உள்ளே வை": ஈபிஎஸ்-ஐ விளாசிய அமைச்சர் தங்கம் தென்னரசு!