மதுரை: தமிழ்நாட்டின் நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் வெளியிட உள்ள வரவு-செலவு அறிக்கை குறித்து, மதுரை அமெரிக்கன் கல்லூரி பொருளாதார துறைத் தலைவரும் இந்திய பொருளாதார சங்கத்தின் செயற்குழு உறுப்பினருமான பேராசிரியர் முனைவர் முத்துராஜா ஈடிவி பாரத் தமிழ்நாடு ஊடகத்திற்கு சிறப்பு நேர்காணல் வழங்கினார்.
அப்போது பேசிய அவர், “உலகப்புகழ் பெற்ற நிதி அலுவலரான பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் தமிழ்நாட்டின் நிதியமைச்சராக இருந்து முதல்முறையாக வெளியிட உள்ள இந்த அறிக்கை பெரும் எதிர்பார்ப்பை தோற்றுவித்துள்ளது. அரசியலுக்கு அப்பாற்பட்டு பல பன்னாட்டு நிறுவனங்களில் பணியாற்றியவர். குறிப்பாக தமிழ்நாட்டு வரவு-செலவு திட்ட அறிக்கையில் மூன்று முக்கிய கூறுகளைக் கவனத்திற் கொள்ள வேண்டும்.
முதலாவதாக சுகாதாரம் சார்ந்த வரவு-செலவு திட்டம். கரோனா பெருந்தொற்றின் காரணமாக உலகமே பெரும் சிக்கலை எதிர்கொண்டிருக்கும் நிலையில், குறிப்பாக இந்தியாவும், தமிழ்நாடும் அதிலிருந்து மீள்வதற்காக பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டிருந்தாலும் கூட, நாம் இன்னும் கடக்க வேண்டிய தூரம் உள்ளது.
வாழ்வாதாரம் சார்ந்த தொழில்களை காப்பாற்றுவது அவசியம்
கரோனா தொற்றைத் தொடர்ந்து நிகழ்கின்ற பொருளாதார சமூக விளைவுகள் மிகவும் கவனத்திற்குரியவைகளாக மாறியுள்ளன. வேலையிழப்பு, வருமானம் இழப்பு ஆகியவற்றுடன் மிக முக்கியமாக உயிரிழப்புகள் நிறைய ஏற்பட்டுள்ளன. இவற்றையெல்லாம் சரி செய்ய வேண்டுமானால் மிக அதிகமான நிதி ஒதுக்கீடு மிகவும் அவசியம்.
இரண்டாவதாக கரோனா பெருந்தொற்றுக் காலத்தில் மிக அதிகமாக சிறு குறு தொழில்கள், அதனைச் சார்ந்த உழைப்பாளர்கள், கிராமத் தொழில்கள், விவசாயம் ஆகியவை பெரிதும் பாதிப்பைச் சந்தித்துள்ளன. எதிர்மறை வளர்ச்சியிலிருந்து இன்னும் மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன. இதனை நாம் காப்பாற்றுவது மிக அவசியம். இவற்றில் அதிகமான வளர்ச்சி பெறுகிறோமோ?, இல்லையா? இந்த அடிப்படைத் தொழில்களை, வாழ்வாதாரம் சார்ந்த தொழில்களை காப்பாற்றுவது அவசியம். இதற்கான நிதி ஒதுக்கீடும் அதிகமாக இருக்க வேண்டும்.
இங்குள்ள பெரிய தொழில் நிறுவனங்கள் அனைத்தும் மேற்கண்ட சிறுதொழில்களை நம்பித்தான் உள்ளன. பெருந்தொழில்களுக்கான இடுபொருட்கள், உற்பத்திப் பொருட்களை அனுப்பிவைப்பவை சிறு குறு தொழில்களே. ஆகையால் சிறு தொழில்கள், கிராம தொழில்கள், விவசாயம் ஆகியவற்றைக் காப்பாற்றுவது மிக முக்கியக் கடமை.
சிறு, குறு தொழில்கள், கிராம தொழில்கள், விவசாயம் ஆகியவற்றை காப்பாற்ற முனையும்பட்சத்தில், அவை சார்ந்த தொழிலாளர்கள் வாழ்க்கை நிலை மேம்படும். அவர்களின் நுகர்வும் அதிகரிக்கும். தற்போதைய இந்தியாவின் பிரச்சனையே நுகர்வின்மைதான். ஆகையால் நுகர்வை அதிகரிக்கும்போது பொருளாதாரம் இயல்பாக எழுந்து நிற்கத் தொடங்கும். ஒருபக்கம் உற்பத்தி அதிகரிக்கத் தொடங்கினால் விற்பனை நிகழ வேண்டும். விற்பனை அதிகரிக்க வேண்டுமானால் நுகர்வைக் கூடுதலாக்க வேண்டும்.
மத்திய, மாநில நிதி உறவுகள் மிக முக்கியத்துவம் வாய்ந்தது
நுகர்வுக்கு இரண்டு முக்கிய காரணிகள் உண்டு. ஒன்று விலை குறைவாக இருக்க வேண்டும். இரண்டு, வாங்குவதற்கான வருமானத்தை அதிகரிக்க வேண்டும். வருமானத்தை அதிகப்படுத்தவும், வேலைவாய்ப்பைப் பெருக்கவும், விலையைக் கட்டுப்படுத்தவும், அதன் மூலம் நுகர்வு அதிகரிக்கவும், இதன் விளைவாக பொருளாதாரம் மேம்படுவதற்கும் இந்த நிதிநிலை அறிக்கை முயற்சி மேற்கொள்ளும் என நான் நம்புகிறேன்.
இதையெல்லாம்விட மத்திய, மாநில நிதி உறவுகள் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. கடந்த ஐந்து ஆண்டுகளாக மத்திய அரசிடமிருந்து வரக்கூடிய வருவாய் குறித்து மாநில அரசு நிறைய குற்றச்சாட்டுகளை வைத்துள்ளது. துறை சார்ந்த ஐஏஎஸ் அலுவலர்களைக் கொண்டு எந்தெந்த விதத்திலெல்லாம் மத்திய அரசிடமிருந்து நிதியை மாநிலத்திற்குள் கொண்டு வருகின்ற நிதி மேலாண்மை முறை மிக முக்கியம்.
கடந்த ஐந்தாண்டுகளாக மத்திய அரசிடமிருந்து நமக்கு வர வேண்டிய வருவாய், தொழில்நுட்ப உதவி ஆகியவற்றையெல்லாம் பெறுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும். இதற்கு மத்திய, மாநில பொருளாதார உறவுகள் மிக மிக அடிப்படையானது. இதில் குறிப்பாக தமிழ்நாட்டிற்குக் கிடைக்க வேண்டிய ஜிஎஸ்டி வரி பங்கு உடனடியாகப் பெறப்பட வேண்டும்.
அதுமட்டுமன்றி ஜிஎஸ்டி வரி விதிப்பில் சில மாற்றங்கள் கொண்டு வரப்பட வேண்டும். வெறுமனே நுகர்வு சார்ந்து மட்டுமே அணுகப்படும் இந்த வரி வருவாய், நுகர்வும் உற்பத்தியும் சார்ந்ததாக மாற்றப்பட வேண்டும். தமிழ்நாடு போன்ற உற்பத்தி அதிகமுள்ள மாநிலங்களில் அதற்கேற்றாற் போன்று ஜிஎஸ்டி வருவாயைப் பெருக்கிக் கொள்வது அவசியம். இதற்காக தமிழ்நாடு வரவு-செலவுத் திட்டத்தில் கொள்கை முடிவுகள் எடுக்கப்பட வேண்டும்.
அனைத்துத் துறைகளையும் உள்ளடக்கிய வளர்ச்சி என்பது மிக முக்கியம். இதற்கான உள்கட்டமைப்பு செய்யப்பட வேண்டும். ஒவ்வொரு துறையும் எந்தெந்த துறைகளைச் சார்ந்திருக்கின்றன? எந்தெந்த துறைகள் முன்னேறினால் அதனைத் தொடர்ந்து பிற துறைகள் முன்னேறும்? எந்தெந்த துறைகள் வளர்ச்சி தொய்வாக உள்ளன? மோசமாக உள்ள துறைகள் எவை? இவற்றையெல்லாம் சரி செய்து அதனை முழுமையாக இயக்குவதற்கு தேவையான திட்டம் தேவை.
மாணவர்களுக்கு பயிற்சி முறை இல்லை
கல்வி மேம்பாட்டிற்காக அதிகமாக செலவிடுதல் வேண்டும். குறிப்பாக போட்டித் தேர்வுகளில் நமது மாணவர்களை பங்குபெறச் செய்ய வேண்டும். ஐஏஎஸ், நீட், டிஎன்பிஎஸ்சி, ரயில்வே ஆகிய எந்தத் தேர்வாக இருந்தாலும், அதற்கேற்றவாறு பயிற்சி முறைகள் மாற்றப்பட வேண்டும். நமது கல்வி முறையைப் பொறுத்தவரை கற்பித்தல் இருக்கின்றதே தவிர, பயிற்சி முறை இல்லை.
பயிற்சி சார்ந்த கல்வி முறையை ஊக்குவிக்க வேண்டும். எல்லாவித போட்டித் தேர்வுகளுக்கும் தயாராகும் வண்ணம் கிராமப்புறத்திலிருக்கும் கல்விக் கூடங்களிலும் கட்டமைப்பு வசதியை ஏற்படுத்த வேண்டும். இதற்குத் தேவையான நிதியாதாரம் வரவு-செலவு அறிக்கையில் உருவாக்குவது மிக அவசியம். பெண்கள் கல்வி, தொழில் முன்னேற்றத்திற்கான ஊக்குவிப்புத் திட்டங்கள் வேண்டும். இதில் குறிப்பாக நாம் கவனிக்க வேண்டியது, எங்கெல்லாம் பெண்கள் தலைமை உள்ளதோ அங்கு லஞ்சம், ஊழல் மிகக் குறைவாகவும், நிர்வாகம் மிகச் சிறப்பாகவும் உள்ளன என்பதைக் கவனத்திற் கொள்ள வேண்டும்.
தகவல் தரவு மையம் உருவாக்கப்பட வேண்டும்
கடந்த 20, 30 ஆண்டு தமிழ்நாடு பொருளாதார நிலைமை குறித்து விரிவாக ஆராயப்பட வேண்டும். தற்போது கூட நிதியமைச்சர் வெள்ளை அறிக்கை வெளியிட்டுள்ளார். இங்குள்ள பல்வேறு துறைகள் குறித்த தகவல்களில் குறைபாடுகள் உள்ளன. தேசிய தரவுகள் மையம் உருவாக்கப்படுவதன் அவசியம் குறித்து நிதி ஆயோக்கில் கூட பேசப்பட்டுள்ளது. தமிழ்நாடு அளவில் இதுபோன்ற தகவல் தரவு மையம் உருவாக்கப்பட வேண்டும். புள்ளியியலில் தேர்ந்த வல்லுநர்கள் நம்மிடம் இருக்கிறார்கள். ஆகையால் அவர்களை பயன்படுத்திக் கொள்வது மிக அவசியம்.
தமிழ்நாட்டின் உள்கட்டமைப்புகளை மேம்படுத்துவதற்கான வரிக் கொள்கைகள் அறிவிக்கப்படுவதற்கு அதிக வாய்ப்புகள் உண்டு. உள்ளாட்சி அமைப்புகளுக்கான முக்கியத்துவத்தை அதிகரிப்பதற்குத் தேவையான நடவடிக்கைகள் வரவு-செலவு அறிக்கையில் இடம் பெறும். உள்ளாட்சித் தேர்தல்கள் அறிவிக்கப்பட உள்ள நிலையில், இந்த அறிவிப்பு உள்ளாட்சி நிர்வாகங்களுக்கு பெரும் ஊக்கமாய் அமையும் என நான் நம்புகிறேன்” என்றார்.
இதையும் படிங்க: EXCLUSIVE INTERVIEW: நாடே எங்களை வரவேற்றது போல் இருந்தது - கேப்டன் மன்பிரீத்