மதுரை உலக தமிழ்ச்சங்கத்தில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மற்றும் தொழில் முனைவோர்களுக்கான சங்கம் நிகழ்வில் நிதி அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் பங்கேற்று, சிறந்த தொழில் அதிபர்கள் மற்றும் தொழில் முனைவோர்க்கு விருதுகளை வழங்கி கெளரவித்தார்.
பின்னர் விழாவில் பேசிய அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், “அரசியலுக்கு பலர் பல காரணத்திற்காக வருகிறார்கள்.
சிலர் சுயநலத்திற்கு, சிலர் பொதுநலத்திற்கு கொள்கைக்காக வருவார்கள். ஆனால், அடிப்படையில் திராவிட தத்துவத்தோடு, ஒரு சமுதாயத்தை எந்த வழியில் நடத்தினால் அவர்களுக்கு கல்வி, பொருளாதார பங்கு கிடைக்குமோ அந்த வகையில் அரசாங்கத்தை இயக்க முடியும் என அரசியலுக்கு வந்தவன் நான்.
தத்துவம் பேசுவபவனுக்கும், சட்ட திட்டங்களை உருவாக்குபவனுக்கும் இணைப்பு இல்லாமல் போகிறது. நிதி ஒதுக்கீடு மற்றும் திட்டங்களை செயலாக்குவதன் வாயிலாக தமிழகத்தின் அனைத்து பகுதிகளும் வளர்ச்சியடைய வேண்டும் என முதலமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்.
தங்கம், ரியல் எஸ்டேட் போன்றவற்றில் முதலீடு செய்வது மட்டும் நாட்டின் வளர்ச்சிக்கு உதவாது. அரசால் செய்ய முடியாத தொழில் வளர்ச்சியை தொழில் முனைவோர்களால்தான் செய்ய முடியும். ‘நான் முதல்வன்’ திட்டம் மூலம் மாணவர்களுக்கான தனி திறமையை பள்ளிப் பருவத்தில் இருந்தே உருவாக்க முடியும். எஸ்.சி, எஸ்.டி ஆணையத்திற்கு நிதியும், பணியாளர்களும் நியமிக்க முதலமைச்சர் நேற்று (செப்.02) உத்தரவு இட்டதிற்கு பின்னர், அதற்கான நிதி ஒதுக்கி, 60 அலுவலர்களுடன் அது இயங்க தொடங்கியுள்ளது.
குஜராத் மாடல் ஆட்சியில் அந்த மாநிலத்தின் வருவாய் தமிழ்நாட்டை விட சில ஆயிரங்கள் அதிகம் இருக்கலாம். ஆனால், தமிழ்நாட்டில் ஆயிரம் மக்களுக்கு நான்கு மருத்துவர்கள் வீதம் இருக்கிறார்கள். குஜராத்தில் ஒரு மருத்துவர் தான் இருக்கிறார். தமிழ்நாட்டில் உயர்கல்வி பயில செல்லும் பெண்களின் எண்ணிக்கை 80 சதவிகிதம். குஜராத்தில் அது 60 சதவிகிதத்திற்கும் குறைவாகவே உள்ளது.
எனவே, திராவிட மாடல் ஆட்சியின் மூலம் தமிழ்நாடு, அனைத்து மாநிலங்களுக்கும் முன்மாதிரியாக விளங்குகிறது. 8 ஆண்டுகளாக பொருளாதாரத்தில் பின்தங்கி இருந்த தமிழ்நாடு தற்போது இரண்டு ஆண்டுகளாக மிக சரியான திசையில் சென்று கொண்டிருக்கிறது.
அமெரிக்க உள்ளிட்ட வெளிநாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் குறிப்பாக மதுரையில் முதலீடு செய்ய நடவடிக்கை மேற்கொண்டு வருகிறேன். மதுரையில் வேலைவாய்ப்பை உருவாக்கும் வகையிலான முக்கியமான முதலீட்டு திட்டம் விரைவில் தொடங்கப்பட உள்ளது. 18-24 மாதங்களில் மதுரையின் முகமே மாறும். வேலைவாய்ப்பு மற்றும் பொருளாதாரத்தில் பெரிய மாற்றம் இருக்கும்” என பேசினார்.
இதையும் படிங்க: புற்றுநோய்ப்பாதிப்பு என்பது நமக்கு அச்சுறுத்தலாகவே உள்ளது - அமைச்சர் மா.சுப்பிரமணியன்