மதுரை மாட்டுத்தாவணி பகுதியில் உள்ள தனியார் விடுதியில் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் இன்று செய்தியாளர்களைச் சந்தித்து பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர்,
"கட்சியின் புதிய தலைமை அலுவலகத்தை ராயப்பேட்டையில் தொடங்கவுள்ளோம். தேசிய மக்கள்தொகை பதிவேட்டை (NPR) காங்கிரஸ் மத்தியில் ஆட்சியில் இருந்த போது கொண்டு வந்தது. அதே சட்டத்தில் தாய், தந்தை, பிறந்த இடம் குறித்த தகவல்கள் குறித்த கேள்விகளைத் தவிர்த்து கணக்கெடுப்பு நடத்தினால் அனைவராலும் ஏற்கக்கூடியதாக இருக்கும். மத்திய, மாநில அரசுகள் என்பிஆர் குறித்த அச்சத்தைப் போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், "அமைச்சர்கள் டவுன் பஸ்சில் செல்வது போல டில்லி சென்று தங்களது சொந்த பிரச்னைகள் குறித்து மத்திய அரசிடம் பேசி வருகின்றனர். ஊடகங்கள் தினகரனை விரும்பவில்லை என்ற நிலைதான் உள்ளது. எங்களது கட்சி எப்போதும் சிறப்பாக தான் செயல்பட்டு வருகிறது. பத்திரிகை சுதந்திரத்தை அடக்கும் வகையில் ஆளும்கட்சியினரின் ஆதரவோடு பத்திரிகையாளர்கள் தாக்கப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும்" என்று தெரிவித்தார்.
மேலும் பேசிய அவர், "வரும் 2021ஆம் ஆண்டு தேர்தலில் எடப்பாடி ஆட்சிக்கு பாடம் புகட்ட அம்மா ஆட்சியை அமைக்கும் வகையில் வரும் தேர்தலில் கூட்டணியை அமைப்போம். ஈபிஎஸ் தந்திரமாக மக்களை ஏமாற்றும் முயற்சியில் தான் டெல்டா பாதுகாப்பு மண்டலம் குறித்து அறிவித்துள்ளார். பெண் சிசுக்கொலையை தடுக்க அம்மா ஆட்சியில் நடவடிக்கை எடுக்கப்பட்டது. தற்போது பெண் சிசுக்கொலைகளை தடுக்க போதுமான நடவடிக்கைகளை இந்த அரசு மேற்கொள்ளவில்லை" என்றார்.
இதையும் படிங்க: பெண் குழந்தைக்கு கள்ளிப்பால்! பெற்றோரின் கொலைவெறி!