மதுரை: பழங்காநத்தத்தில் விசுவ ஹிந்து பரிஷத் துறவியர் மாநாடு நடைபெற்றது. இதில் மதுரை ஆதீனம், கோவை காமாட்சி ஆதீனம், மன்னார்குடி ஜீயர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அப்போது பேசிய மதுரை ஆதீனம், “பாரதியார் தற்பொழுது இருந்திருந்தால் செந்தமிழ் நாடெனும் போதினிலே இன்ப டாஸ்மாக் வந்து பாயுது காதினிலே என்று பாடியிருப்பார்” என்று வேதனை தெரிவித்தார்.
நடிகர் விஜய் படங்களை பார்க்காதீர்: இந்துக்களை அவதிக்கும் வகையில் பேசும் நடிகர் விஜய்யின் படங்களை பார்க்காதீர்கள் எனவும் சாலமன் பாப்பையாவை பல்லக்கில் தூக்கும் போது தருமபுரம் ஆதீனத்திற்கு ஏன் பல்லக்கு தூக்க கூடாது எனவும் தெரிவித்தார். இந்து அறநிலையத்துறை கோயில் உண்டியலில் காசு போடாதீர்கள், உண்டியல் பணம் வேறு எங்கோ செல்கிறது என்றார்.
கோயில்கள் நம்மைவிட்டு போனால் நமது சமயமும் நம்மை விட்டு போய்விடும்; கோவில் இடங்களை ஆளும் கட்சியினரும் எதிர் கட்சியினரும் எடுத்து கொண்டு விட்டார்கள் நாம் குத்தகைக்கு கேட்டால் குத்துவதற்கு கை வருகிறது; கோயில்களில் குத்தகை மற்றும் வாடகை பாக்கி கொடுக்க மறுப்பவர்கள் அடுத்த பிறவியில் வவ்வாலாக பிறப்பார்கள் எனக் கூறினார்.
சீமான் கேள்விக்கு பதில் இல்லை: ஆன்மிகத்தை திருடி கொண்டு திராவிடம் எனச் சொல்கிறார்கள், திராவிடம் என்பதற்கு அர்த்தம் என்ன என சீமான் கேட்ட கேள்விக்கு தற்பொழுது வரை யாரும் பதில் சொல்லவில்லை; இலவசமாக கோவணமும் திருவோடும் கொடுக்கும் திட்டத்தை மட்டுமே திராவிட கட்சிகள் பாக்கி வைத்துள்ளன எனப் பேசினார்.
மாநாட்டில் பேசிய மன்னார்குடி ஜீயர், சட்டவிரோதமாக மதம் மாறியவர்கள் நாட்டுக்கு விரோதிகள் என்றார். தொடர்ந்து பேசிய கோவை காமாட்சிபுரம் ஆதீனம், இந்துக்களை காக்க மஹா சன்னிதானங்கள் சாலைக்கு வந்து விட்டார்கள். திருமுறையை படித்தவர்கள் வாழ்வில் முன்னேறுவார்கள் என்பதற்கு அறிஞர் அண்ணாவை சான்றாக கூறலாம். சாதி இரண்டொழிய வேறில்லை என்பது அறிஞர் அண்ணா கூறியதாக சொல்கிறார்கள் அது திருமுறையில் உள்ளது எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: சிதம்பரம் நடராஜர் ஆலயத்தை கட்டுப்பாட்டில் எடுத்துக் கொள்ளும் திட்டம் இல்லை - அமைச்சர் சேகர் பாபு