மதுரை மாநகராட்சி 41ஆவது வார்டுக்கு உட்பட்ட பகலவன் பூக்காரத் தெரு பகுதியில் உள்ள வயதான தம்பதியினர் பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் பயனாளியாக தேர்ந்தெடுக்கப்பட்டு வீடு கட்டியுள்ளனர். இந்நிலையில் வீட்டின் கட்டுமான பணிகள் முடிவடைந்த நிலையில் வீட்டிற்குத் தேவையான பாதாள சாக்கடை, குடிநீர் குழாய் இணைப்பு பெறுவதற்கான பணிகளை தொடங்கியுள்ளனர்.
அப்போது, அந்த வீட்டிற்குச் சென்ற 42ஆவது வார்டு திமுக மாமன்ற உறுப்பினர் செல்வியின் கணவர் கார்மேகம் பணம் கேட்டுள்ளார். அதற்கு அந்த வயதான தம்பதி தனது மகனிடம் பேசிக்கொள்ளுமாறு கூறியுள்ளனர். இதனையடுத்து தம்பதியினரின் மகன் திமுக கவுன்சிலரின் கணவரை தொடர்பு கொண்டுபேசினார்.
அப்போது, ’நான் தான் கவுன்சிலர்’ எனக்கூறும்போது, இது 41ஆவது வார்டு என இளைஞர் பதிலளித்துள்ளார். ’இல்லை. அது 42ஆவது வார்டாக மாறிருச்சு. நான்தான் கவுன்சிலர்’ எனக் கூறியதோடு ’பிரதமர் ஸ்கீம்ல வீடு கட்டும் போது என்னிடம் கேட்காம எப்படி கட்டுன’ என மிரட்டி பேசியதோடு, ’எந்த வீடு கட்டினாலும் கவுன்சிலர் என்னிடம் சொல்லனும்’ எனக் கூறுகிறார்.
மேலும், ’நேரில் வந்துட்டு போ’ என பேசியதோடு நேரில் வரும்போது ’உன்னுடைய வாயை உடைப்பேன்’ என மிரட்டியுள்ளார். இந்த ஆடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: கர்நாடகா: தாழ்த்தப்பட்ட பெண் குழாயில் நீர் குடித்ததால் காலியாக்கப்பட்ட டேங்க்