மதுரை: திருச்சியை சேர்ந்த நித்யா என்பவர் தனது மகன் மற்றும் மகளுக்கு காட்டு நாயக்கன் சாதி சான்றிதழ் வழங்கக் கோரிய தங்களது மனுவை நிராகரித்து திருச்சி வருவாய் மண்டல அலுவலர் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து, தங்களது குழந்தைகளுக்கு சாதி சான்றிதழை வழங்க உத்தரவிடக்கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மேல்முறையீட்டு மனுவினைத் தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த பொறுப்பு தலைமை நீதிபதி ராஜா மற்றும் நீதிபதி கிருஷ்ணகுமார் அமர்வு, "குழந்தைகளின் தந்தை காட்டு நாயக்கர் சமூகத்தைச் சேர்ந்தவர். அவர் திருச்சி வருவாய் மண்டல அலுவலரிடம் இருந்து அதற்கான சாதி சான்றிதழ் பெற்றுள்ளார். மனுதாரர் பட்டியல் இனத்தை சேர்ந்தவர்.
காட்டுநாயக்கன் சாதி சான்றுகளை குழந்தைகளுக்கு வழங்க கோரி மனுதாரர் விண்ணப்பித்த நிலையில், திருச்சி வருவாய் மண்டல அலுவலர், இணையம் மூலமாகவே விண்ணப்பிக்க வேண்டும் என கூறியுள்ளார். அதன் அடிப்படையில் மனுதாரரும் விண்ணப்பித்துள்ளார். அதோடு இதுவரை கணவரது சாதிக்கான இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் எந்த பலன்களையும் பெறவில்லை என்பதையும் குறிப்பிட்டுள்ளார்.
வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் திருமணம் செய்து கொள்கையில் அவர்களின் குழந்தைகளுக்கு தந்தையின் சாதியின் அடிப்படையிலோ அல்லது தாயின் சாதியின் அடிப்படையில் சான்றிதழ்களை பெற்றுக் கொள்ளலாம். என அரசின் இரண்டு அறிவிப்புகள் மிக தெளிவாக உள்ளது என்றும், மாவட்ட வருவாய் அலுவலர் தனக்கு விதிக்கப்பட்ட 10,000 ரூபாய் அபராதத்தை மதுரை இலவச சட்ட உதவிகள் மையத்திற்கு வழங்க வேண்டும் எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
மேலும், மனதாரரின் குழந்தைகளுக்கு சாதி சான்றிதழ் கோரிய மனுவை நிராகரித்து திருச்சி மாவட்ட வருவாய் அலுவலர் பிறப்பித்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. மனுதாரரின் மனுவை பரிசீலித்து, சட்டத்தின் படி சாதி சான்றிதழ்களை வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.
திருநெல்வேலி, மதுரை, ராமநாதபுரம் என தமிழகத்தின் பல இடங்களிலும் காட்டு நாயக்கர் சமூக மக்கள் தங்களுக்கு சாதி சான்றிதழ் வழங்க கோரி அரசு அலுவலகங்கள் முன் காத்து கிடக்கின்றனர். அவர்கள் சாதி சான்றிதழ் கோரி பலமுறை மனுக்கள் அளித்தும், அவர்கள் மனுக்கள் மீது முறையான நடவடிக்கைகள் எடுக்கப்படாமல் உள்ளது. இந்நிலையில் சாதிசான்றிதழ் கோரி மனு அளிக்கப்பட்ட நிலையில் மனுவின் மீது முறையான நடவடிக்கை எடுக்காத அரசு அலுவலருக்கு நீதிமன்றம் அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கியுள்ளது பொதுமக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.
இதையும் படிங்க: ஓபிஎஸ் அணி ஆர்ப்பாட்டத்தில் ஈபிஎஸ்? - நீதிமன்றம் போட்ட கண்டிஷன்!