மதுரை: மேலூர் அருகே தெற்குத்தெரு கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில், அரையாண்டு தேர்வுக்கு வகுப்பறைகள் பயன்படுத்தப்பட்டதால் 9ஆம் வகுப்பு மாணவர்கள் முப்பதுக்கும் மேற்பட்டோர் மரத்தடியில் அமர்ந்து படித்துள்ளனர். அப்போது, வேகமான காற்று வீசியதில் அந்த மரம் வேரோடு சாய்ந்து விழுந்து ஏற்பட்ட விபத்தில் 13 மாணவிகள் உட்பட மொத்தம் 16 மாணவர்களுக்கு காயம் ஏற்பட்டது.
மரம் விழும் சத்தம் கேட்டு மாணவர்கள் சுதாரித்து எழுந்து ஓடியதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. காயமடைந்த மாணவர்களுக்கு தெற்குத்தெரு ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டது.
விபத்து குறித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கார்த்திகா கூறுகையில், “மாணவர்கள் அனைவருக்கும் லேசான சிராய்ப்பு தான் ஏற்பட்டுள்ளது. காயமடைந்த மாணவர்கள் அனைவரும் நலமுடன் உள்ளனர். வகுப்பறைகளை தேர்வுக்கு பயன்படுத்தியதால் தான் மாணவர்கள் மரத்தடியில் படிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது.
நல்ல நிலையில் இருந்த மரம் தான், எதிர்பாராத விதமாக விழுந்துள்ளது. பாதுகாப்பற்ற நிலையில் உள்ள மரங்களை அகற்றுவதற்கு ஏற்கனவே அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன” எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி ஜாமீன் கோரிய வழக்கு... டிச.19-க்கு ஒத்திவைப்பு!