மதுரை: தென்காசியைச் சேர்ந்த எட்வர்ட் ரூபன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுத்தாக்கல் செய்தார். அந்த மனுவில், "திருநெல்வேலி - தென்காசி இடையே நான்கு வழிச்சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதில் அத்தியூத்து கிராமம் அருகே தேநீர் கடை எதிரில் உள்ள சென்டர் மீடியன் இடையில் பாதை அமைக்கப்பட்டுள்ளது.
சுய லாபத்தின் அடிப்படையில் இந்த சென்டர் மீடியன் இடையில் பாதை அமைக்கப்பட்டுள்ளது. இதேபோன்று ஆலங்குளம் அருகே உள்ள பாரத் பெட்ரோல் நிலையம் அருகே சென்டர் மீடியன் பாதை அமைக்கப்பட்டுள்ளது. இதுபோன்று நெடுஞ்சாலைகளில் அருகருகே சென்டர் மீடியன் இடையில் பாதைகள் அமைப்பதால் அதிக சாலை விபத்துகள் நடக்கிறது.
எனவே, நெடுஞ்சாலைகளில் அருகருகே அமைக்கப்பட்டிருக்கும் சென்டர் மீடியன் இடையில் உடைக்கப்பட்டு பாதைகள் அமைக்கபட்டதை மூடுவதற்கு உத்தரவிட வேண்டும்" என மனுவில் கூறியிருந்தார். இந்த மனு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், லெட்சுமி நாராயணன் ஆகியோர் அமர்வுக்கு முன் விசாரணைக்கு வந்தது.
அப்போது, மனுதாரர் தரப்பில் சாலையின் நடுவில் உள்ள சென்டர் மீடியன் உடைத்து பாதைகள் விடுவதால் விபத்துக்கள் ஏற்படுவதாகவும், அதை மூட உத்தரவு விட வேண்டும் என வாதிடப்பட்டது. இதனையடுத்து நீதிபதிகள், கன்னியாகுமரி முதல் சென்னை வரை சாலையின் நடுவில் உள்ள சென்டர் மீடியன் திறப்புகளை மூடிவிட்டால் விபத்துக்களின் எண்ணிக்கை குறைந்து விடுமா? என கேள்வி எழுப்பியதோடு, நம் நாட்டில் சாலை விபத்து எங்கு தான் நடக்காமல் உள்ளது? நாம் தான் கவனமாக இருக்க வேண்டும்.
இதுபோன்று மனுக்களைத் தாக்கல் செய்து நீதிமன்ற நேரத்தை வீணடிக்கக்கூடாது. மனுவைத் தாக்கல் செய்தவருக்கு ரூ.5000 அபராதம் விதிக்கப்படுகிறது. இதனை மனுதாரர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளை சட்ட உதவி மையத்திற்கு செலுத்த வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டு வழக்கை தள்ளுபடி செய்தனர்.
இதையும் படிங்க: 2019 வருமான வரி சோதனை வழக்கு! வேலூர் எம்.பி. கதிர் ஆனந்த் நீதிமன்றத்தில் ஆஜர்!