மதுரையைச் சேர்ந்த சுந்தர்ராஜ் என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல மனு ஒன்றைத் தாக்கல்செய்தார். அதில், "கடந்த 1989ஆம் ஆண்டு பிற்படுத்தப்பட்ட வகுப்பு இரண்டாகப் பிரித்து பிற்படுத்தப்பட்ட வகுப்பு, மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பு எனப் பிரிக்கப்பட்டது.
அதில் யாதவர் சமுதாய மக்களுக்கு ஒரு விழுக்காடு இட ஒதுக்கீடு மட்டுமே வழங்கப்பட்டது. தமிழ்நாட்டில் 15 விழுக்காடு யாதவர் சமுதாயத்தைச் சேர்ந்த மக்கள் இருக்கின்றனர். பிற்படுத்தப்பட்ட வகுப்பில் அதிகமான சமுதாய மக்கள் இருப்பதால் யாதவர் சமுதாய மக்களுக்குப் போதுமான இட ஒதுக்கீடு கிடைக்கவில்லை.
எனவே யாதவர் சமுதாய மக்களுக்குப் பிற்படுத்தப்பட்ட வகுப்பிலிருந்து 15 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கக்கோரி உயர் அலுவலர்களுக்கு மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. எனவே, யாதவர் சமுதாய மக்களுக்குப் பிற்படுத்தப்பட்ட வகுப்பில் 15 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்க உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும்" என மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் சிவஞானம், ஆனந்தி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில், தற்போது வன்னியர்களுக்கு 10 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்கியதைப் போல் யாதவர் சமுதாயத்தினருக்கும் 15 விழுக்காடு பிற்படுத்தப்பட்ட வகுப்பில் இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என வாதிட்டனர்.
இந்த வழக்குத் தொடர்பாக நீதிபதிகள் கூறுகையில், மனுதாரரின் கோரிக்கை குறித்து மக்களவையில் அல்லது மாநிலங்களவையில் முறையிடலாம். இதில் நீதிமன்றம் தலையிட முடியாது எனக் கூறி வழக்கைத் தள்ளுபடிசெய்து உத்தரவிட்டனர்.
இதையும் படிங்க: ’டிஸ்சார்ஜ் ஆகி செல்லும்போது ஆர்டி பிசிஆர் தேவையில்லை’ - சுகாதாரத் துறை இயக்குநர்