கரோனா அச்சுறுத்தலால் நாடு முழுவதும் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு, தமிழ்நாட்டில் சில பகுதிகளில் முழு ஊரடங்கும் போடப்பட்டது. மேலும், ஊரடங்கு உத்தரவையடுத்து அத்தியாவசிய பொருள்கள் விற்பனைசெய்யும் கடைகள், நிறுவனங்கள் தவிர மற்றவை செயல்பட அனுமதி மறுக்கப்பட்டதால், பலர் வேலையிழந்து தவித்துவருகின்றனர்.
தங்களது கையிருப்புகளைக் கொண்டு ஊரடங்கு காலத்தைச் சமாளித்துவிடலாம் என எண்ணியிருந்த பலரும் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டதால் மனமுடைந்து மற்ற நாள்களைச் சமாளிப்பது குறித்த சிந்தனை வேதனையுடன் எழுந்திருக்கும்.
அதேபோன்ற மனநிலையில்தான் உள்ளார் மதுரை மாவட்டம் பாலமேடு அருகே உள்ள குறவன்குளம் பகுதியைச் சேர்ந்த மாற்றுத்திறனாளியான நாகராஜன். இவர் தனது நிறைமாத கர்ப்பிணி மனைவி நேசமணி, மூன்றாம் வகுப்பு படித்துவரும் மகள் திவ்யதர்ஷினியுடன் வாடகை வீட்டில் வசித்துவருகிறார்.
தமிழ்நாடு அரசின் மாற்றுத்திறனாளி திட்டத்தின்கீழ் ஆயிரம் ரூபாய் நிவாரணமும் பெற்றுவருகிறார். இவர் மத்திய அரசின் 100 நாள் வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழும், இவரது மனைவி நேசமணி மதுரையில் உள்ள தனியார் நிறுவனத்திலும் பணிபுரிந்துவந்துள்ளனர்.
கரோனா தீநுண்மி பரவல் தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளதால் கடந்த 30 நாள்களுக்கும் மேலாக வேலையிழந்து, வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளனர்.
காலை, மாலை, இரவு ஆகிய நேரங்களில் தங்களுக்கான உணவினை யாராவது அளிப்பார்களா என்று எதிர்நோக்கியும், தனது மூன்றுசக்கர வாகனத்தில் மகளுடன் பாலமேடு, அலங்காநல்லூர் சென்று தன்னார்வலர்கள் அளிக்கும் உணவிற்காகக் காத்திருந்தும் இருக்கின்றனர்.
வறுமை தங்களை வாட்டிவருவதாகவும், கரோனா ஊரடங்கு முடியும்வரை தங்கள் குடும்பத்தைக் காப்பாற்ற உதவிபுரிய வேண்டும் எனவும் அரசு, தன்னார்வலர்களிடம் கோரிக்கைவிடுக்கிறார் நாகராஜன்.
இதையும் பார்க்க: டிக்டாக்கில் வீடியோ... உதவி கிடைக்குமா காத்துக்கிடக்கும் இஸ்லாமிய குடும்பங்கள்!