மதுரை: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் டெங்கு காய்ச்சல் தீவிரம் அடைந்து வருகிறது. சென்னையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு 4 வயது சிறுவன் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
மேலும் அதன் தொடர்ச்சியாக புதுச்சேரி மாநிலத்தில் நேற்றைய முன்தினம் (செப். 13) பொறியியல் கல்லூரி மாணவி உள்பட இரண்டு பெண்கள் டெங்கு காய்ச்சல் பதிப்பு காரணமாக உயிரிழந்த நிலையில், மேலும் 50 பேர் வரை புதுச்சேரியில் உள்ள மருத்துவமனைகளில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.
இதுமட்டும் அல்லாது, புதுச்சேரி மாநிலத்திற்கு அருகாமையில் உள்ள கடலூர் மாவட்டத்திலும் டெங்கு காய்ச்சல் பரவல் அதிகரித்துள்ளது. அதன் வெளிப்பாடாக நேற்றைய தினம் (செப். 14) 4 பெண்கள் 2 ஆண்கள் என 6 பேர் டெங்கு காய்ச்சல் பாதிக்கப்பட்டு கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த நிலையில் மதுரை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயில், மழை என மாறி வருகின்ற சீதோஷ்ண நிலை மாற்றத்தால் பெரும்பாலானோர் சளி மற்றும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உள்ளனர். குறிப்பாக மதுரை அரசு மருத்துவமனையில் கடந்த சில நாட்களாக காய்ச்சல் மற்றும் சளி போன்றவற்றிற்கு சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
இதற்கிடையே, கடந்த சில நாள்களாக பல்வேறு மாவட்டங்களில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வரக்கூடிய இந்த இக்கட்டான சூழ்நிலையில், மதுரை மற்றும் புதுக்கோட்டை மாவட்டத்தில் டெங்குகாய்ச்சலின் பாதிப்பு அதிகமாக காணப்படுகிறது.
அந்த வகையில், மதுரை மாநகராட்சியில் கடந்த 7 நாள்களில் மட்டும் 11 குழந்தைகள் உள்பட 37 பேருக்கு டெங்குகாய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தற்போது வரையிலும் 50 பேர் காய்ச்சலுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நபர்கள் அனைவருக்கும், மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையின் மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
மேற்கொண்டு டெங்கு காய்ச்சல் அதிகம் பரவாமல் இருக்க, சுகாதாரத்துறை அதிகாரிகள் மாவட்டம் முழுவதுமாக தீவிரமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், இன்று ஒரே நாளில் 5 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. மதுரை மாவட்டத்தில் தொடர்ந்து டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருவதால் மக்கள் மத்தியில் பீதி ஏற்பட்டு உள்ளது.
இதையும் படிங்க: கேரளாவில் மேலும் ஒருவருக்கு நிபா வைரஸ் பாதிப்பு!