மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகேயுள்ள பயணியர் விடுதியில் அதிமுக இலக்கிய அணி நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தலைமை வகித்தார்.
அந்த கூட்டத்தில் அவர் பேசியதாவது, "இந்தியாவில் நிதி ஆயோக் திட்டத்தின் கீழ் கடல் சார்ந்த வணிகத்தில் இந்தியாவிலேயே தமிழ்நாடு மூன்றாமிடம் வகிக்கிறது. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் ஆகியோர் கரோனா தடுப்பு பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
எய்ம்ஸ் மருத்துவமனை கட்டட பணிகளுக்கான நிதி வழங்கும் ஜப்பானிய நிறுவனம் விரைவில் ஒப்பந்தத்தில் கையெழுத்திட உள்ளது. இன்னும் இரண்டு மாதங்களில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டட பணிகள் தொடங்கும் என்ற மத்திய அரசின் தகவல் மகிழ்ச்சி அளிப்பதாக உள்ளது.
அதிமுகவின் வெற்றி சாதாரணமாக இருக்கக்கூடாது ஏற்கனவே 10 ஆண்டுகள் ஆட்சி புரிந்து திமுகவை வனவாசம் அனுப்பி விட்டோம். 2021ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெறுபவர்கள் தான் நூறு ஆண்டுகள் மக்கள் சேவை புரிய முடியும். எனவே வருகின்ற சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக வெற்றிபெற செய்து திமுகவை நிரந்தரமாக வனவாசம் அனுப்ப வேண்டும். அதற்கு அனைத்து சார்பு அணி நிர்வாகிகளும் உழைக்க வேண்டும்" என்றார்.
இதையும் படிங்க: விஜயகாந்த் ’கிங்’காக இருக்கலாமே! - அமைச்சர் ஆர்.பி. உதயகுமார்