மதுரை மாவட்டம் சசி நகர் பகுதியைச் சேர்ந்த அசோக்குமார் மதுரை அரசு இராசாசி மருத்துவமனையில் பணியாற்றிவருகிறார். இவர் நான்கு பசுங்கன்றுகளை வளர்த்துவருகிறார். அவற்றை மேய்ச்சலுக்காக வீட்டின் அருகே கட்டி வைத்துவிட்டு அசோக்குமார் பணிக்குச் சென்றார். அவர் திரும்பிவந்து பார்க்கும்போது ஒரு கன்றைக் காணவில்லை, மூன்று கன்றுகள் மட்டுமே இருந்துள்ளன.
அடையாளம் தெரியாத நபர்கள் கன்றை கடத்திச் சென்றதால் அதிர்ச்சி அடைந்த அசோக்குமார் தல்லாகுளம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதனிடையே, மதுரை கரிமேடு பகுதியில் ஒரு வழிப்பாதையில் சந்தேகத்துக்குரிய வகையில் அதிவேகமாகச் சென்ற சொகுசு காரை விரட்டிச் சென்று பிடித்த காவல் துறையினர் அதில் பசுங்கன்று ஒன்று இருப்பதை சோதனையில் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
அந்தக் காரில் இருந்த சசி நகர் பகுதியைச் சேர்ந்த மணிமாறன், சூரியகுமார் இருவரையும் பிடித்து விசாரணை செய்தபோது அவர்கள் இருவரும் பசுங்கன்றைத் திருடிவந்தது தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து இருவரையும் கைதுசெய்த காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
மதுரையில் மது அருந்த பணம் இல்லாத விரக்தியில் கடந்த சில மாதங்களாக இளைஞர்கள் கால்நடைகளைத் திருடும் சம்பவம் அதிகரித்துக் கொண்டே இருப்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:மின்மோட்டார் திருடிய இளைஞருக்கு தர்ம அடி கொடுத்த பொதுமக்கள்!