மதுரை: மனித நேய மக்கள் கட்சியின் வழக்கறிஞர் அணி செயளாலர் கலந்தர் ஆசிக் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில், "ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ். மங்களம் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமத்தில் இருக்கக்கூடிய மக்கள் மீன்பிடித் தொழில் செய்து வருகின்றனர். அந்த கிராமங்களில் இருந்து பொதுமக்கள் காய்ச்சல், விசக்கடி, உள்ளிட்ட முதல் உதவி சிகிச்சைகளுக்காகவும், கர்ப்பிணி பெண்களுக்கான மகப்பேறு சிகிச்சைகளை ஆகியவை RS மங்களம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் தான் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த கட்டிடம் கட்டி 30 ஆண்டுகளுக்கு மேல் ஆனதால், தற்பொழுது பலவீனமாக காணப்படுகிறது. அவ்வப்போது மேற்கூரைகள் இடிந்து விழுகின்றன. இதனால் இங்கு பணிபுரியக் கூடிய மருத்துவர்கள், செவிலியர்கள் மருத்துவமனைக்கு வர அஞ்சுகின்றனர். இது தொடர்பாக கடந்த 10 ஆண்டுகளாக பல போராட்டங்களும், மாவட்ட சுகாதார அதிகாரிகளிடம் பல மனுக்கள் அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. எனவே ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ். மங்களம் மேம்படுத்தபட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தினை இடித்து, புதிய சுகாதார நிலையம் கட்டித்தர உத்தரவிட வேண்டும்" என குறிப்பிட்டிருந்தார்.
ஏற்கனவே இந்த வழக்கை விசாரணை செய்த உயர் நீதிமன்ற மதுரை கிளை, ராமநாதபுரம் மாவட்ட முதன்மை நீதிபதி மருத்துவமனை கட்டிடத்தை ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு பிறப்பித்து. நீதிமன்றத்தின் உத்தரவின் அடிப்படையில் மாவட்ட நீதிபதி மருத்துவமனை கட்டிடத்தை ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்திருந்தார். அதில் மருத்துவமனை கட்டிடங்கள் சேதம் அடைந்து இருப்பதாகவும், ஆய்வுக்கு வருவது தெரிந்து பல இடங்களில் பூச்சு, பெயின்ட் வேலைகள் நடந்துள்ளதாகவும் அறிக்கையை தாக்கல் செய்திருந்தார்.
மாவட்ட நீதிபதியின் அறிக்கையை சுகாதாரத்துறை செயலாளருக்கு உடனடியாக அனுப்ப கடந்த விசாரணையின் போது நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து இருந்தது. மேலும் சுகாதாரத்துறை செயலாளர் தரப்பில் சம்பந்தப்பட்ட கட்டிடத்தை இடித்து கட்டுவதற்கு ஒரு கோடியே 70 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் வைத்தியநாதன், பரத சக்கரவர்த்தி பிறப்பித்துள்ள உத்தரவில். "மிகவும் பழமையான சிதிலமடைந்த இதுபோன்ற கட்டிடங்களில் உயிருக்கு ஆபத்தான நிலையில் மக்கள் சிகிச்சை பெறுவது நினைத்துப் பார்க்க முடியாத ஒன்று.
இந்தக் கட்டிடம் முழுமையாக சேதமடைந்து உள்ளதை புகைப்படத்திலும், அறிக்கையிலும் பார்க்க முடிகிறது. எனவே சுகாதாரத்துறை முதன்மைச் செயலாளர், ஆர்.எஸ். மங்கலம் மருத்துவமனைக்கு நேரில் சென்று ஆய்வு செய்து போர்க்கால அடிப்படையில் கட்டிடத்தை முழுமையாக இடித்து அப்புறப்படுத்தும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஏனென்றால் இந்த கட்டிடத்தை பழுது பார்ப்பது என்பது பயனளிக்காத ஒன்றாக தெரிகிறது, மருத்துவமனைக்கு வரும் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். கட்டிடம் எந்த நேரத்திலும் இடிந்து விழும் சூழலில் உள்ளது. எனவே இந்த கட்டிடத்தில் செயல்படும் மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தை உடனடியாக வேறு பாதுகாப்பான கட்டிடத்திற்கு மாற்றி, மருத்துவ சிகிச்சைகள் வழங்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் சுகாதாரத் துறை செயலாளர் ஆய்வு குறித்து விரிவான அறிக்கையை ஆகஸ்ட் 7ஆம் தேதி தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை ஒத்தி வைத்துள்ளனர்.
இதையும் படிங்க: கலைஞர் மகளிர் உரிமைத் தொகை; சென்னையில் 98 வார்டுகளில் விண்ணப்பப் பதிவு தொடக்கம்!