மதுரை: திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த தனியார் பள்ளி இடைநிலை ஆசிரியர் ரோகினி. இவர் உயர் நீதிமன்றம் மதுரைக் கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவில், “நான் தனியார் பள்ளியில் இடைநிலை ஆசிரியராக பணியாற்றி வருகிறேன். எனக்கு அரசு தரப்பில் பணி நியமன ஒப்புதல் வழங்க வேண்டும் என்றும் ஒப்புதல் வழங்கக்கோரி மாவட்ட தொடக்க கல்வி அலுவலகத்தில் விண்ணப்பித்திருந்தேன்.
விண்ணப்பம் நீண்ட காலமாக காத்திருப்பில் உள்ளதால், எனது பணி ஒப்புதலை வழங்க வேண்டும், ஒப்புதல் அளிக்கப்பட்ட பின்பே ஊதியம் வழங்கப்படும் என்பதால் ஆசிரியராக பணி நியமன அரசு ஒப்புதல் அளிக்க உத்தரவிட வேண்டும் என 2019ஆம் ஆண்டு வழக்கு தொடர்ந்திருந்தேன்.
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், வழக்கில் பள்ளிக்கல்வித்துறை தரப்பில் பதிலளிக்க 2019ஆம் ஆண்டு உத்தரவிட்டது. ஆனால், தற்போது வரை எந்த ஒரு பதிலும் கிடைக்கப்பெறவில்லை. இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதி பட்டு தேவானந்த் முன்பு இன்று (செப்.23) விசாரணைக்கு வந்தது. அப்போது, “2019ஆம் ஆண்டு அரசு தரப்பில் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் அரசு தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய தாமதிக்கப்பட்டுள்ளது. தற்போது அரசு தரப்பில் வழக்கு குறித்து அளிக்கப்பட்டுள்ள பதிலும் திருப்தி அளிக்கவில்லை.
நான்கு வருட காலங்கள் தாமதமாக பதிலளித்த தொடக்கக் கல்வி இயக்குநருக்கு 10ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து, அதனை வழக்கறிஞர்கள் நலன் நிதியில், இரண்டு வாரத்தில் செலுத்த வேண்டும் என நீதிபதி உத்தரவு பிறப்பித்தார். மேலும் இந்த வழக்கு குறித்து அரசு தரப்பில் பதிலளிக்க உத்தரவிட்டு, வழக்கை அக்டோபர் 13ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.
இதையும் படிங்க: கூடுதல் போதைக்காக சானிடைசர் குடித்து உயிரிழந்த சம்பவம்: மேலும் ஒருவர் பலி.. வெளியான பரபரப்பு பின்னணி!