மதுரை: தற்போது சித்திரை மாதம் என்பதால் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களிலுள்ள கிராமங்களில் கோயில்களில் சித்திரைத் திருவிழாக்கள் நடைபெற்று வருகின்றன. இந்த விழாக்களில் காலம் காலமாக ஆடல், பாடல் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருவது வழக்கம்.
ஆடல், பாடல் நிகழ்ச்சியில் நடத்தப்படுவதால் சில இடங்களில் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படுவதால் அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. மேலும் கரோனா தொற்று பாதிப்புக்குப் பின் நடைமுறை தளர்த்தப்பட்டு உள்ள நிலையில் காவல் துறையினர் ஆடல் பாடல் நிகழ்ச்சி நடத்த அனுமதிக்கவில்லை.
இதனால் கோயில் திருவிழாக்களில் ஆடல், பாடல் நிகழ்ச்சி நடத்த அனுமதிக்க கோரி மதுரை, தேனி, திண்டுக்கல், விருதுநகர், சிவகங்கை மாவட்டங்களில் இருந்து பல்வேறு மனுக்கள் விடுமுறை கால நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன.
இந்த மனுக்களை விசாரணை செய்த நீதிபதி ரமேஷ் பல்வேறு நிபந்தனைகளை விதித்து ஆடல் பாடல் நிகழ்ச்சிக்கு அனுமதி வழங்கி உத்தரவு பிறப்பித்துள்ளார். குறிப்பாக ஆடல், பாடல் நிகழ்ச்சி மாலை 8 மணிக்கு ஆரம்பித்து இரவு 11 மணிக்குள் முடித்துக்கொள்ள வேண்டும் எனவும்; ஆபாசமான நடனங்கள் இருக்கக்கூடாது என்றும் குறிப்பிட்டு உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.
இதையும் படிங்க: சிக்கன் ஷவர்மாவிற்கு தடை; அதிர்ச்சிக் கொடுத்த நகராட்சி