மதுரை: கஜா புயலால் பாதிக்கப்பட்ட தம்பதி முறையான உதவி கிடைக்காததால் கழிவறையில் வாழும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.
மதுரை மாவட்டம் வஞ்சிநகரம் ஊராட்சிக்கு உட்பட்டது பெரிச்சான்குடிபட்டி. இந்த கிராமத்தில் சத்துணவு அமைப்பாளராகப் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர் வெள்ளைச்சாமி (62). இவரது மனைவி யசோதா. தங்கள் பிள்ளைகள் அழகு பாண்டி என்ற மகன், சுசி, சசிகலா என்ற மகள்களுக்கு திருமணம் செய்து கொடுத்துவிட்டு இவர்கள் இருவரும் தனியே வசித்து வருகிறார்கள்.
கடந்த 2018ஆம் ஆண்டு வீசிய கஜா புயல் காரணமாக இவர்கள் சொந்த இடத்தில் கட்டியிருந்த மண்குடிசை முழுவதுமாக இடிந்து விழுந்தது.
புயலால் பாதிக்கப்பட்ட வீடுகள் குறித்து கணக்கெடுக்க வந்த அலுவலர்கள், இந்த தம்பதியின் வீட்டை கண்டுகொள்ளாததால் அவர்களுக்கு உரிய நியாயம் கிடைக்கவில்லை. இதன் காரணமாக அருகில் இருந்த கழிப்பறையை சுத்தம் செய்து அதில்தான் வசித்து வருகிறார்கள்.
மேலும், மழைக்காலம் என்றால் உறவினர்கள் வீட்டிலோ அல்லது அருகில் உள்ள பள்ளி வளாகத்திலோ தங்கிக்கொள்கிறார்கள். தங்களுக்கு அரசு உதவ வேண்டும் என்பது இவர்கள் வேண்டுகோளாக உள்ளது.
கொட்டாம்பட்டி ஊராட்சி ஒன்றியம் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள உறுதி அளித்துள்ளது. எனினும் விரைந்து நடவடிக்கை எடுக்கப்படுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.