மதுரை அரசு இராசாசி மருத்துவமனையில் நாள்தோறும் கரோனா வைரஸ் தொற்று காரணமாக நூற்றுக்கணக்கானோர் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சைக்கென்றே ஆயிரம் படுக்கைகள் கொண்ட சிறப்பு மருத்துவமனை அங்கு உருவாக்கப்பட்டுள்ளது.
நாள்தோறும் மதுரை அரசு இராசாசி மருத்துவமனையில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆனால், அதன் முடிவுகளைப் பெறுவதில் தொடர்ந்து தாமதம் ஏற்பட்டு வருவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டி வந்தனர்.
இந்நிலையில், இன்று (ஆக. 17) முதல் பரிசோதனை முடிவு தொடர்பான சான்றிதழ்களை இணையம் மூலம் தரவிறக்கம் செய்துகொள்ளும் வசதி தொடங்கப்பட்டுள்ளது. இதற்காக, www.covid19mdumc.in என்ற இணையதள பக்கத்தில் SRF IDயை பூர்த்தி செய்தால், கரோனா பரிசோதனை செய்த நபரின் செல்போன் எண்ணிற்கு வரும் குறுந்தகவலில் SRF ID OTP அனுப்பப்படும்.
அதன் மூலம் எளிமையான முறையில் கரோனா பரிசோதனை முடிவுகளை பொதுமக்கள் பெற்றுக் கொள்ளலாம் என மதுரை அரசு இராசாசி மருத்துவமனை முதல்வர் சங்குமணி தெரிவித்துள்ளார்.