கரோனா வைரஸ் பரவாமல் தடுப்பது குறித்து சுகாதாரத் துறை சார்பில் மதுரை மாவட்ட அளவிலான ஒருங்கிணைப்புக் குழுவின் கூட்டம் ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் பேசிய மதுரை மாவட்ட ஆட்சியர் வினய், ”மதுரையில் உள்ள ஒவ்வொரு நியாய விலைக் கடைகளிலும் தினசரி காலையில் 50 பேர், மாலையில் 50 பேர் என 100 பேருக்கு நிவாரணம் வழங்கப்படும்.
ரேஷன் கடைகளில் சமூக இடைவெளியைப் பின்பற்றி பொருட்கள் வழங்கப்படுகின்றன. தட்டுப்பாடு ஏற்படாத அளவிற்கு உணவுப்பொருட்கள் இருப்பு உள்ளது. மக்கள் சுயகட்டுப்பாட்டுடன் சமூக இடைவெளியை பின்பற்றி நிவாரண உதவிகளைப் பெற்றுக்கொள்ளலாம்.
வெளியூர் சென்றிருப்போருக்கு பின்னர் வழங்கப்படும். மதுரையில் 2,500-க்கும் மேற்பட்ட வெளிமாநில பணியாளர்களுக்கு வேண்டிய உதவிகள் செய்யப்பட்டு வருகிறது. வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களில் சிக்கி இருக்கும் மதுரை மாவட்டத்தைச் சேர்ந்தவர்களுக்கு தேவையான உதவிகளை செய்ய மாவட்ட நிர்வாகம் தயாராக இருக்கிறது.”என்றார்.
முன்னதாக, மதுரை மக்களுக்கு அரசின் நிவாரண உதவிகள் கிடைக்கவில்லையென்றால் மாவட்ட நிர்வாக அலுவலர்களை அணுகலாம் என மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
அதில், ”ஊரடங்கு உத்தரவு மேலும் 19 நாட்கள் நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், பொதுமக்கள் தங்களுக்குரிய நிவாரண உதவிகள் மற்றும் பொருட்கள் கிடைக்கவில்லையெனில் மதுரை மாவட்ட நிர்வாகத்தால் அமைக்கப்பட்டுள்ள கீழ்க்கண்ட அலுவலர்களைத் தொடர்பு கொள்ளலாம். மதுரை மாவட்டத்தில் ஏழை, எளிய மக்கள், ஆதரவற்றோர் மற்றும் வெளிமாநில தொழிலாளர்களுக்கு நிவாரண உதவிகளை தனிநபர்கள் வழங்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
அவற்றை அரசு அலுவலர்கள் மூலமே வழங்க வேண்டும். அதன்படி தன்னார்வலர்கள், தொண்டு நிறுவனங்கள், பொது மக்கள் வழங்க விரும்பும் நிவாரண உதவிகளை, பொருட்களை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கொண்டு வந்து தரலாம். அவற்றை பெற்று இருப்பு வைக்கவும், அதன் விவரங்களை பதிவு செய்யவும், பொது மக்களுக்கு அரசு அலுவலர்கள் மூலம் நிவாரண பொருட்களை வழங்க ஏற்பாடு செய்யவும் கீழ்க்கண்ட அலுவலர்களை நியமனம் செய்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்து உள்ளார்.
எனவே, கரோனா வைரஸ் தாக்கத்தால் பாதிக்கப்பட்டவர்கள் நிவாரண பொருட்களை பெற கீழ்கண்ட அலுவலர்களை தொடர்பு கொள்ளவும். மாவட்ட ஆய்வுக்குழு தலைவர் ரெங்கநாதன் 9842596198, வட்டாட்சியர் திருமலை (ஆய்வுக்குழு அலுவலகம்) 9842666231, வட்டாட்சியர் முத்துப்பாண்டியன் (திருமங்கலம்) 9842011400, அசோக்குமார் (முதுநிலை வருவாய் ஆய்வாளர், மாவட்ட ஆய்வுக் குழு அலுவலகம், மதுரை ) 9080854217, பெரோஸ்கான் ( முதுநிலை வருவாய் ஆய்வாளர், மாவட்ட ஆய்வுக் குழு அலுவலகம், மதுரை ) 7010913400, பாலமுருகன் ( முதுநிலை வருவாய் ஆய்வாளர், மாவட்ட ஆய்வுக் குழு அலுவலகம், மதுரை ) 9787009016, இக்பால் பாட்சா ( அலுவலக உதவியாளர், மாவட்ட ஆய்வுக் குழு அலுவலகம், மதுரை ) 9080854217. மேற்கண்ட அலுவலர்களைத் தொடர்பு கொண்டு தேவையான நிவாரண உதவிகளை பெறலாம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தக் கூட்டத்தில் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர். கே.ராஜூ, மாநகர் காவல் ஆணையர் டேவிட்சன் ஆசிர்வாதம், மாநகராட்சி ஆணையர் விசாகன் உட்பட பலர் பங்கேற்றனர்.
இதையும் படிங்க : ‘2 முறை சோதனையில் இல்லை... 3ஆவது முறையில் கரோனா உறுதி’ - கீழமாத்தூருக்கு சீல்!