இஸ்லாமியர்களின் முக்கிய திருநாளான ரமலானன்று தமிழ்நாடு அரசும், மத்திய அரசும் விடுமுறை அறிவித்துள்ளன. நடப்பாண்டில் மே 14ஆம் தேதி ரமலான் திருநாள் கொண்டாடப்படும் என கூறப்படுகிறது. ஆனால் ரமலான் திருநாள், பிறை தென்படுவதைப் பொறுத்து மாறுமென்பதால் ஒரு நாள் முன்னதாகவோ, பின்னதாகவோ கொண்டாடப்படும்.
இதை கணக்கில் கொள்ளாமல், நடப்பாண்டு சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புகளின் தேர்வுகள் மே 13, 15 ஆகிய தேதிகளில் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த தேதிகளில் அறிவிக்கப்பட்டுள்ள தேர்வுகளை வேறு தேதிகளுக்கு மாற்ற வேண்டும் என மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் கோரிக்கை விடுத்து மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியாலுக்கு கடிதம் எழுதியிருந்தார்.
![Consideration to change the examination dates announced on the day of Ramzan](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-che-script-photo-suvenkaresan-reply-7209655_05032021104841_0503f_1614921521_90.jpg)
இவரது கோரிக்கைக்கு மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால், பதில் கடிதம் எழுதியுள்ளார். அதில், "சிபிஎஸ்இ தேர்வுத் தேதிகளை மாற்றுவது குறித்த உங்கள் பிப்ரவரி 8 தேதியிட்ட கடிதம் கிடைத்தது. அதன் மீது பொருத்தமான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது" என்று தெரிவித்துள்ளார்.
இது குறித்து கருத்து தெரிவித்த எம்பி சு.வெங்கடேசன், "எனது கோரிக்கை பரிசீலிக்கப்படுவது மகிழ்ச்சி. நல்ல முடிவு விரைவில் வருமென்று நம்புகிறேன்" என்று கூறியுள்ளார்.