மதுரை மாவட்டம் மதுரை-அலங்காநல்லூர் சாலை சாந்திநகரில், ஐந்தாயிரம் ரூபாய் வாடகை வீட்டில் வசித்துவருபவர் ராஜா-ராஜம் தம்பதி. இவர்களுக்கு ஐந்து குழந்தைகள் உள்ளன. மாற்றுத் திறனாளியான ராஜா அப்பகுதியில் வெல்டிங் பட்டறை நடத்திவந்தார்.
தற்போது கரோனா வைரஸ் பரவல் தடுப்பு ஊரடங்கு காரணமாக பட்டறையை திறக்க முடியாமல் வாழ்வாதாரம் இழந்தார். அதன்காரணமாக அவரால் இரண்டு மாதங்களாக வீட்டு வாடகை கொடுக்க முடியவில்லை.
அதனால் வீட்டின் உரிமையாளர் வாடகை தரவில்லை என்றால் வீட்டை காலி செய்ய வேண்டும் என நெருக்கடி கொடுத்துள்ளார். ராஜா தவணை முறையில் வாடகையை செலுத்துகிறேன் எனக் கூறியும் உரிமையாளர் மறுத்துவிட்டார்.
அதன் காரணமாக வேறு வழியின்றி ராஜா-ராஜம் தம்பதி 5 குழந்தைகளுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சென்று ஆட்சியர் டி.ஜி. வினயிடம் இதுகுறித்து தெரிவித்தனர். அதைக்கேட்ட ஆட்சியர் சம்பந்தபட்ட குடும்பத்தை அந்த வீட்டிலேயே தங்க வைக்க நடவடிக்கை எடுக்குமாறு வடக்கு வட்டாட்சியர் சுரேசுக்கு உத்தரவிட்டார்.
அந்த உத்தரவின்படி வட்டாட்சியர் வீட்டின் உரிமையாளரிடம் பேச்சுவார்த்தை நடத்தி மூன்று மாத கால அவகாசத்துடன் மாற்றுத் திறனாளி குடும்பத்தை அதே வீட்டில் குடியமர்த்தினார்.
இது குறித்து ராஜா கூறுகையில், 'வீட்டின் வாடகை முன்பணம் ரூ.10 ஆயிரம் உரிமையாளரிடம் உள்ளது. கரோனா ஊரடங்கு காரணமாகவே என்னால் வாடகை செலுத்தவில்லை. தீடீரென வீட்டை காலி செய்ய வேண்டும் என்று சொன்னதால் வேறு வழி தெரியாமல் ஆட்சியரிடம் தெரிவித்தேன்"எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: மதுரையில் ஒரே நாளில் கரோனாவால் 192 பேர் பாதிப்பு!