விருதுநகர் ஆணைக்குழாய் அருகே உள்ள மேலத்தெருவைச் சேர்ந்த முத்தையா - காளீஸ்வரி தம்பதியினரின் மகன் மணிகண்டன் (28) இவருக்கும் திருமங்கலம் அடுத்த கப்பலூர் சுங்கச்சாவடி அருகே உள்ள காந்தி நகரைச் சேர்ந்த சிவக்குமார் - சித்ராதேவி தம்பதியினரின் மூன்றாவது மகள் ஜோதிலெட்சுமிக்கும் (21) கடந்த இரண்டரை ஆண்டுகளுக்கு முன்பு திருமணமான நிலையில், இவர்களுக்கு ஒன்றரை வயதில் பெண் குழந்தையும் ஒன்று உள்ளார்.
சொந்தமாக நிதி நிறுவனம் நடத்தி வந்த மணிகண்டன், அந்தத் தொழிலில் நஷ்டத்தை சந்தித்ததால் மகளிர் குழுவிற்கு ஏஜெண்டாக பணியாற்றி வந்தார்.
இந்நிலையில் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு ஜோதிலட்சுமி பெற்றோர்கள் இருசக்கர வாகனத்தில் சென்றபோது விபத்தில் அவரது தந்தை சிவகுமார் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இதனால் பெற்றோருக்கு உதவியாக ஜோதிலட்சுமி தனது மகளுடன் காந்தி நகருக்கு வந்துள்ளார்.
இதையடுத்து ஜோதிலட்சுமி தனியாக இருந்ததால், மருத்துவமனைக்கு சென்று வர உதவுவதாகச் சொல்லி கப்பலூர் செல்வலட்சுமி நகரை சேர்ந்த கார்த்திக் (24) என்பவர் துணையாக இருந்துள்ளார். இவர்கள் இருவரும் அடிக்கடி மருத்துவமனைக்கு சென்று வந்த நிலையில், ஜோதிலட்சுமி வீட்டில் தனியாக இருந்ததை பயன்படுத்தி அவருடன் கார்த்திக் நட்பாக பழகி வந்துள்ளார்.
நாளடைவில் அந்த நட்பு காதலாக மாற இருவரும் அடிக்கடி ஜோதிலட்சுமியின் வீட்டில் தனிமையில் இருந்துள்ளனர். இதையடுத்து ஜோதிலட்சுமியின் பெற்றோர்கள் சிகிச்சை முடித்து வீட்டுக்கு வந்த பின்னர், அவர் மீண்டும் தனது கணவரது வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு சென்ற பின்னரும் அவர் கார்த்திக்கை அடிக்கடி செல்ஃபோனில் தொடர்பு கொண்டு பேசி வந்ததாக கூறப்படுகிறது.
இது மணிகண்டனுக்கு தெரியவர கணவன்-மனைவி இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது. தகராறு முற்றிய நிலையில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு கணவனுடன் சண்டையிட்டுக் கைக்குழந்தையுடன் ஜோதிலட்சுமி பெற்றோர் வீட்டிற்கு வந்துவிட்டார்.
இந்த சம்யத்தில் கடந்த திங்கட்கிழமை காலை கார்த்திக், அவரது நண்பர் ஒருவருடன் விருதுநகரிலுள்ள மணிகண்டன் வீட்டிற்கு வந்து, உங்கள் இருவரையும் சமாதானம் செய்துவைக்க ஜோதிலட்சுமியின் தாயார் அழைத்து வரச்சொன்னார் எனக்கூறி மணிகண்டனை இருசக்கர வாகனத்தில் அழைத்து வந்துள்ளார்.
இத்தகவலை மணிகண்டன் தனது பெற்றோரிடம் தெரிவித்து விட்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றுள்ளார். இதனையடுத்து காலை 10 மணிக்கு மணிகண்டன் தனது தாயார் காளீஸ்வரிக்கு ஃபோன் செய்திருக்கிறார். ஆனால், அவரது தொடர்பு உடனடியாக துண்டிக்கப்பட்டுவிட்டது.
இதனையடுத்து சற்று நேரத்தில் ஜோதிலட்சுமியின் தாயார் மணிகண்டன் பெற்றோரை செல்போனில் தொடர்பு கொண்டு உங்களது மகன் மணிகண்டனை கார்த்திக் கொலை செய்துவிட்டதாக தன்னிடம் கூறினான் எனவும், உடனே அது என்ன என்று விசாரியுங்கள் என்றும் கூறியுள்ளார்.
இதனால் அதிர்ச்சியடைந்த மணிகண்டனின் பெற்றோர் திருமங்கலம் அருகே உள்ள ஆஸ்டின்பட்டி காவல் நிலையத்திற்கு நடந்த சம்பவங்களை கூறி மணிகண்டனை கண்டுபிடித்து தருமாறு புகார் அளித்துள்ளனர்.
அவர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் மணிகண்டனை தேடி வந்த ஆஸ்டின்பட்டி காவல் துறையினர், திங்கட்கிழமை நள்ளிரவு 12 மணிக்கு ஜோதிலட்சுமி வீட்டில் இருந்து சிறிது தூரத்தில் உள்ள தனியாருக்கு சொந்தமான சிறிய அறை முன்பு கழுத்தில் கத்தி குத்தப்பட்ட நிலையில் பிணமாக கிடந்துள்ளார். பின் கொலை குறித்து விசாரணையை மேற்கொள்ள கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டதில் மணிகண்டன் கழுத்து உட்பட 7 இடங்களில் சரமாரியாக குத்தப்பட்டு அவர் கொலை செய்யப்பட்டிருப்பதுதெரியவந்தது.
இதுகுறித்து ஜோதிலட்சுமியிடம் விசாரித்ததில், கார்த்திக் உட்பட சிலர் மணிகண்டனை கொலை செய்துள்ளார்கள் என்பது தெரிய வந்ததையடுத்து, காவல் துறையினர் கார்த்திக், அவருக்கு உடந்தையாக இருந்தவர்களை தேடிவருகின்றனர். மேலும் இறந்த மணிகண்டனின் உடலை கைப்பற்றி மதுரை அரசு ராசாசி மருத்துவமனைக்கு உடற்கூறாய்விற்காக அனுப்பி வைத்தனர்.
மணிகண்டன் இறந்தது குறித்து தகவலறிந்து வந்த அவரது உறவினர்கள் கதறி அழுத சம்பவம் காண்போரின் நெஞ்சை உருக்குவதாக இருந்தது. மேலும் மணிகண்டன் கொலைக்கு ஜோதிலட்சுமி, அவருடைய தாயார் சித்ராதேவி, தந்தை சிவக்குமார் ஆகியோரும் உடந்தையாக இருந்திருக்கலாம் என மணிகண்டன் பெற்றோர்கள் சந்தேகித்து புகார் அளித்துள்ளனர். அதனடிப்படையில் அவர்களிடமும் விசாரணை நடைபெற்றுவருகிறது.
இதையும் படிங்க:கோவையில் திருமணத்துக்கு மறுத்த காதலியை கொலை செய்த காதலன்