மதுரை ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கூட்டரங்கில் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் சிறு தொழில் புரிவோருக்கு 10 லட்சம் ரூபாய் நிவாரண நிதி வழங்கிய பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், ”மதுரை மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 75 விழுக்காட்ட்டினர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள செய்தி ஆறுதல் அளிக்கிறது. தற்போது தொழில் துறையில் கூடுதல் கவனம் செலுத்தி தொழிலை மீட்டெடுக்க தமிழ்நாடு அரசு முனைப்பு காட்டி வருகிறது. இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் தமிழ்நாட்டில் மட்டுமே ரேஷன் அட்டைதாரர்களுக்கு முகக்கவசம் வழங்கப்படுகிறது.
பருவமழை காலங்களில் ஏற்படும் டெங்கு போன்ற பாதிப்புகளைத் தடுக்க அதிக கவனம் செலுத்த மாவட்ட நிர்வாகங்களுக்கு முதலமைச்சர் அறிவுறுத்தியுள்ளார். பொருளாதார மீட்பு நடவடிக்கையில் தற்பொழுது தீவிர கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. இ-பாஸ் தளர்வு குறித்த கொள்கை முடிவுகளை முதலமைச்சர் எடுப்பார்” என்றார்.
சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து நடிகர் கார்த்திக் தெரிவித்த கருத்து குறித்த கேள்விக்குப் பதிலளித்த அமைச்சர், ”ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் கருத்து சொல்லலாம். அவருடைய கருத்துக்களில் விவாதிப்பதற்கு ஒன்றுமில்லை” என்றார்.
கன்னியாகுமரியில் அண்ணா சிலைக்கு காவி உடை அணிவித்தது குறித்த கேள்விக்குப் பதிலளித்த அமைச்சர், ”தமிழ்நாட்டை அமைதிப் பூங்காவாக முதலமைச்சர் வழிநடத்திவருகிறார். சட்டம் ஓழுங்கை சீர்குலைக்கும் வகையில் நடந்து கொள்பவர்களை, குறிப்பாக கறுப்பர் கூட்டத்தின் மீது குண்டாஸ் போடப்பட்டது போல் இரும்புக்கரம் கொண்டு முதலமைச்சர் ஒடுக்குவார்” என்றார்.