கீழடியில் தமிழ்நாடு தொல்லியல் துறையின் சார்பில் அகழாய்வுப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. ஆறாம் கட்ட அகழாய்வுப் பணிகள் கடந்தாண்டு செப்டம்பர் 30ஆம் தேதியுடன் அதிகாரப்பூர்வமாக நிறைவு பெற்றன.
ஆறு கட்ட அகழாய்வுப் பணிகள்:
கடந்த 2014ஆம் ஆண்டு இந்திய தொல்லியல் துறையின் சார்பில் கீழடியில் அகழாய்வுப் பணிகள் தொடங்கின. முதல் மூன்று கட்ட அகழாய்வுப் பணிகள் மத்திய தொல்லியல் துறையின் சார்பாகவும் 4, 5, 6ஆம் கட்ட அகழாய்வுப் பணிகள் தமிழ்நாடு தொல்லியல் துறையின் சார்பாகவும் நடைபெற்றன.
2020 பிப்ரவரி 19ஆம் தேதி ஆறாம் கட்ட அகழாய்வுப் பணியை காணொலிக் காட்சி மூலம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கிவைத்தார். கீழடி மட்டுமன்றி அதன் அருகிலுள்ள கொந்தகை, அகரம், மணலூர் ஆகிய பகுதிகளிலும் முதல் முறையாக அகழாய்வுப் பணிகள் விரிவுப்படுத்தப்பட்டன. முதல் மூன்று கட்ட அகழாய்வுகளில் 7,818, தமிழ்நாடு தொல்லியல் துறை மேற்கொண்ட நான்காம் கட்ட அகழாய்வில் 5,820, ஐந்தாம் கட்ட அகழாய்வில் 900 என தொல்பொருட்கள் அப்பகுதியில் கண்டறியப்பட்டன.
ஆறாம் கட்ட அகழாய்வில் 2020 ஜூலை 31ஆம் தேதி வரை கீழடியில் 950, கொந்தகையில் 21, மணலூரில் 29, அகரத்தில் 786 என மொத்தம் 1,786 தொல்பொருட்கள் கண்டறியப்பட்டன. அதுமட்டுமன்றி கொந்தகையில் 40 முதுமக்கள் தாழிகளும், மேற்கண்ட நான்கு இடங்களிலும் இதுவரை 128 கரிம படிமங்களும் கண்டெடுக்கப்பட்டன. கடந்த செப்டம்பர் மாதம் வரை நடைபெற்ற ஆறாம் கட்டப் பணியின் ஒட்டுமொத்த அகழாய்விலும் ஏறக்குறைய இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட தொல்பொருட்கள் கண்டறியப்பட்டன.
ஆறாம் கட்ட அகழாய்வில் கிடைத்த தொல்பொருட்கள்:
ஆறாம் கட்ட அகழாய்வில் மட்டும் தமிழி எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட மண்பாண்ட ஓடுகள், சூது பவளம், அகேட், விலைமதிப்பற்ற மணிகள், சுடுமண்ணாலான ஆமை வடிவமைப்பு இடம் பெற்ற முத்திரைகள், மாட்டு இனத்தை சேர்ந்த விலங்கு ஒன்றின் விலா எலும்பு, எடைக்கற்கள், செங்கல் கட்டுமானங்கள், ஒரே முதுமக்கள் தாழியில் 10 எண்ணிக்கைகள் கொண்ட பளபளப்பான சிவப்பு நிற பானைகள், கருப்பு சிவப்புநிற பானைகள், 8க்கும் மேற்பட்ட மனித எலும்புக்கூடுகள், மண்டை ஓடுகள், நுண் கற்காலத்தைச் சேர்ந்த மெல் அழகு கத்திகள், நுண் கருவிகள் நீக்கப்பட்ட வெட்டு முகப்புடன் கூடிய செர்ட் வகை மூலக்கூறு, வழவழப்பு தன்மையுடைய கல் மழு, 300 மில்லி கிராம் எடையுடைய தங்க நாணயம், கரிம மயமான நெல்மணிகள், செலடான் வகை சீன மட்பாண்ட ஓடு, புகைப்பான்கள் ஆகியவை கண்டறியப்பட்டன. மேலும் ஆறாம் கட்ட ஆய்வில் மூன்று உறைகிணறுகள் கண்டறியப்பட்டன. அதில் அகரத்தில் கண்டறியப்பட்ட உறை கிணறு 25க்கும் மேற்பட்ட அடுக்குகளைக் கொண்டதாகும்.
ஏழாம் கட்ட அகழாய்வுப் பணிகள் தொடக்கம்:
சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலி காட்சி மூலம் ஏழாம் கட்ட அகழாய்வுப் பணிகளை இன்று (பிப்.13) தொடங்கி வைத்தார். இப்பணிகள் இந்த ஆண்டு செப்டம்பர் வரை நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஆண்டை போலவே இந்த முறையும் கீழடி, கொந்தகை, அகரம், மணலூர் ஆகிய பகுதிகளில் தமிழ்நாடு தொல்லியல் துறை அகழாய்வை மேற்கொள்ளவிருக்கிறது. தமிழ்நாடு தொல்லியல் துறையின் துணை இயக்குநர் சிவானந்தம் தலைமையில் ஒவ்வொரு பகுதிக்கும் அலுவலர்கள் பொறுப்பேற்று, இந்த அகழ்வாய்வை மேற்கொள்கின்றனர். தொல்லியல் படிப்பு படிக்கும் மாணவர்களும் இக்கள ஆய்வில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.
இதையும் படிங்க: கீழடியில் ஏழாம் கட்ட அகழாய்வு பணிகள் தொடக்கம் - தமிழ்நாடு தொல்லியல் துறை