மதுரை: உயர் நீதிமன்றங்களில் நீதிபதிகள் தங்கள் அறையில் இருந்து நீதிமன்ற அரங்கிற்குச்செல்லும் போது அவர்களுக்கு முன் வெள்ளை நிற உடையும், சிவப்பு நிற தலைப்பாகையும் அணிந்தும் நீதிபதி வருவதை குறிக்கும் வகையில், கையில் செங்கோல் ஏந்தி சமிக்ஞை செய்து கொண்டே செல்பவர், ’சோப்தார்’ என அழைக்கப்படுகிறார்.
உயர் நீதிமன்ற நீதிபதிகளுக்கான 40 சோப்தார்கள் கடந்த ஆண்டு தேர்வு செய்யப்பட்டனர். உயர் நீதிமன்ற வரலாற்றில் பெண் சோப்தாராக சென்னை உயர் நீதிமன்றத்தில் திலானி என்பவர் கடந்த ஆண்டு நியமிக்கப்பட்டார்.
இந்நிலையில், சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையின் பெண் சோப்தாராக லலிதா என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார். மதுரையைச் சேர்ந்த பட்டதாரியான லலிதா, உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் உள்ள நீதிபதி மாலாவுக்கு சோப்தாராக நியமிக்கப்பட்டுள்ளார்.
நீதிபதிகளுக்குத் தேவையான சட்டப் புத்தகங்கள், வழக்குத் தொடர்பான கோப்புகளை எடுத்துத் தருவது உள்ளிட்ட நீதிபதிகளின் அன்றாடப் பணிகளை சோப்தார்கள் மேற்கொள்வார்கள்.
இதையும் படிங்க: இந்தியா சர்வதேச ஒழுங்கை வடிவமைக்கும் செல்வாக்கைக் கொண்டிருக்கும் என்பதில் சந்தேகமில்லை - அன்னாலெனா