திருநெல்வேலி: தொடர் கண்காணிப்பில் வைக்கப்பட்டிருந்த புல்லட் ராஜா யானையை அடர்ந்த வனப்பகுதிக்குள் விடும் முயற்சியில் வனத்துறை வெற்றி கண்டுள்ளது. அதன்படி இன்று அதிகாலை சுமார் 3:30 மணியளவில் நெல்லை அப்பர் கோதையாறு வனப்பகுதிக்குள் விடப்பட்டது.
நீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதியில் சுமார் ஒரு மாதமாக போக்குக்காட்டி சேரங்கோடு பகுதியில் குடியிருப்புகளைச் சேதப்படுத்தி வந்த 'புல்லட் ராஜா' என்ற காட்டு யானையைக் கடந்த டிசம்பர் 27-ஆம் தேதி கும்கி யானைகள் உதவியுடன் இரண்டு டோஸ் மயக்க ஊசி செலுத்தி வனத்துறையினர் வளைத்துப் பிடித்தனர்.
சிக்கி புல்லட் ராஜா
தொடர்ந்து, பிடிபட்ட யானை டிசம்பர் 29ஆம் தேதி முதல் முதுமலை யானைகள் காப்பகத்தில் கண்காணிக்கப்பட்டு, அடர்ந்த வனப்பகுதியில் விடுவிக்கப்படும் என வனத்துறையினர் சார்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் நேற்றிரவு லாரியில் ஏற்றப்பட்ட புல்லட் ராஜா, சாலை மார்க்கமாக இன்று (ஜனவரி 24) அதிகாலையில் நெல்லையை வந்தடைந்தது.
இதையடுத்து, முண்டந்துறை புலிகள் காப்பக துணை இயக்குநர்கள் இளையராஜா, ராமேஸ்வரன் தலைமையிலான நெல்லை வனத்துறை மற்றும் மருத்துவ குழுவினர் இணைந்து புல்லட் ராஜா யானையை சேரன்மகாதேவி, கல்லிடைக்குறிச்சி, மணிமுத்தாறு, மாஞ்சோலை வழியாக அப்பர் கோதையாறு (மேல்) (Upper Kodayar அல்லது அப்பர் கோதையார் என்று கூறப்படும்) அடர் வனப்பகுதியில் விட்டனர். புல்லட் ராஜா யானை லாரியில் கொண்டு வருவதையொட்டி, செல்லும் வழிகளில் வனத்துறையினர் மின்சாரத்தைத் துண்டித்து, யானையைப் பாதுகாப்புடன் களக்காடு கொண்டு சென்றனர்.
ஏற்கனவே தேனி மாவட்டம் கம்பம் பகுதியில் சுற்றித் திரிந்த அரிக்கொம்பன் என்ற காட்டு யானையைக் கடந்த 2023ஆம் ஆண்டு ஜூன் மாதம் வனத்துறையினர் கோதையாறு பகுதியில் விட்ட நிலையில், தற்போது புல்லட் ராஜாவும் இதே பகுதியில் விடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஒரு மாதம் தொடர் கண்காணிப்பு:
கூடலூரில் பிடிக்கப்பட்ட புல்லட் ராஜா யானையை சுமார் ஒரு மாதம் வனத்துறையினர் தீவிரமாகக் கண்காணித்து வந்தனர். இதில் யானையின் பழக்கவழக்கத்தை மாற்றுவதற்குக் கடந்த ஒரு மாதம் வனத்துறையினர் தீவிர பயிற்சி கொடுத்துள்ளனர்.
குறிப்பாக உணவுப் பழக்க வழக்கத்தை மாற்ற இந்த கண்காணிப்பு பணி நடைபெற்றது. அதன்படி அரிசிக்கு மாற்றாக யானை இயற்கையாக உண்ணும் பிற காட்டு உணவுகள் கொடுக்கப்பட்டது. இதனால், புல்லட் ராஜா பழக்கவழக்கத்தில் சற்று மாற்றம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இதனால், நேற்று நெல்லை மாவட்டம் மாஞ்சோலை அருகே உள்ள கோதையாறு (மேல்) வனப்பகுதிக்குக் கொண்டு செல்ல வனத்துறை முடிவு செய்தனர். அதே சமயம் அரிக்கொம்பன் காட்டு யானையை இதே பகுதியில் கொண்டு வந்துவிட்டபோது நெல்லை மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதையும் படிங்க: கடல் ஆமைகள்: இறால்களை சுவைக்க வந்து விசைப்படகில் மோதி உயிரிழக்கும் சோகம்! காப்பாற்ற என்ன வழி?
குறிப்பாக மேற்குத் தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் வசிக்கும் பொதுமக்கள் மற்றும் காட்டுப் பகுதிகள் வசிக்கும் காணி பழங்குடி மக்கள் கடுமையாக எதிர்த்தனர். எனவே, இந்த முறை முன்னெச்சரிக்கையாக இரவோடு இரவாக புல்லட் யானையை வனத்துறையினர் கொண்டு செல்ல முடிவு செய்தனர்.
அப்பர் கோதையாறு பகுதியைத் தேர்வு செய்தது என்?
யானை விடப்படும் கோதையாறு (மேல்) பகுதி அடர் பகுதியாகும். அதாவது அம்பாசமுத்திரம் அருகே கல்லிடைக்குறிச்சியிலிருந்து சுமார் 3,000 அடி உயரத்தில் இந்த மலைப்பகுதி அமைந்துள்ளது. கல்லிடைக்குறிச்சியில் இருந்து மணிமுத்தாறு வழியாக சுமார் 15 கிலோமீட்டர் தூரம் பயணித்து மாஞ்சோலை வனப்பகுதியை அடைய வேண்டும்.
அங்கிருந்து சுமார் 4 கிலோ மீட்டர் தொலைவில் கோதையாறு அணை அமைந்துள்ளது. அந்த அணையின் பின்பகுதியில் தான் யானை விடப்படுகிறது. இந்த பகுதி என்பது பசுமையான புற்கள், பசுமையான மரங்கள் என ஆண்டுதோறும் வற்றாத இயற்கை வளங்கள் நிரம்பிய இடமாகும்.
இயற்கையான பழங்கள், அணை தண்ணீர் என அனைத்து வகையிலும் யானைக்கு ஏற்ற சூழல் அமைந்திருக்கும். குறிப்பாக யானையின் பசியைப் போக்கும் வகையில் அதற்குத் தேவையான அனைத்து பசுமையான உணவுகளும் இங்கே கிடைக்கும் என்பதால் யானையை விடுவதற்கு ஏற்ற இடமாக இந்த பகுதியை வனத்துறையினர் கருதுகின்றனர்.