மதுரை: இந்திய ரயில்வே துறையின் வருவாய் பிரிவு சார்பாக பல்வேறு ரயில் நிலையங்களில் வருவாயை பெருக்குவதற்காக பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்த வகையில், உள்ளூர் தயாரிப்புகளை ஊக்குவிக்க ரயில் நிலையங்களில் இலவசமாக விற்பனை செய்ய "ஒரு நிலையம் ஒரு பொருள்" திட்டம், ரயில் பெட்டிகளில் விளம்பரம் செய்வது, ரயில் நிலையத்திற்கு வந்து செல்லும் வாகனங்களுக்கு கட்டண நிர்ணயம் என்பது உள்ளிட்ட பல்வேறு முயற்சிகளின் வாயிலாக வருவாயை பெருக்கும் தொடர் செயல்பாடுகளில் பல்வேறு நிலையங்கள் ஈடுபட்டு வருகின்றன.
இதன் மூலம் குறிப்பிடத்தக்க வருமானம் அந்தந்த நிலையங்களில் கிடைத்து வருகிறது. குறிப்பாக, ரயில் நிலையங்களில் சினிமா திரைப்படங்களுக்கான காட்சிகளை எடுப்பதற்கு பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றப்பட்டு ரயில் நிலையங்களில் திரைப்பட படப்பிடிப்புகளை எடுக்க அனுமதிக்கப்பட்டு வருகிறது.
அதன் தொடர்ச்சியாக, தற்போது இளைஞர்கள் மத்தியில் பிரபலமாகி வரும் வெட்டிங் ஷூட் (wedding shoot) அல்லது விளம்பரதாரர்கள் புகைப்படங்கள் எடுப்பதற்கு மதுரை ரயில்வே கோட்டத்தில் அனுமதி வழங்கப்பட்டுள்ளதோடு, அதற்கான கட்டணங்களும் நிர்ணயம் செய்யப்பட்டு, தெற்கு ரயில்வே சார்பில் கடந்த ஆண்டு ஆணை வெளியிடப்பட்டு உள்ளது.
இதன் அடிப்படையில், தெற்கு ரயில்வேயின் மதுரை கோட்டத்தில் உள்ள மதுரை ரயில் நிலையத்தில் புதுமணத் தம்பதியர் 5 ஆயிரம் ரூபாய் கட்டணம் செலுத்தி திருமண புகைப்படங்களை எடுத்துக் கொள்ளலாம் எனவும், ரயில் பெட்டியின் பின்புலம் வேண்டும் என்றால் கூடுதல் கட்டணமாக ஆயிரத்து 500 ரூபாய் வசூலிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், மதுரை கோட்டத்தில் உள்ள பிற ரயில் நிலையங்களுக்கான கட்டணம் 3 ஆயிரம் ரூபாய் (ரயில் பெட்டிக்கு கூடுதலாக ஆயிரம் ரூபாய்) என மதுரை கோட்ட ரயில்வே நிர்வாகம் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது. மதுரை ரயில் நிலையத்தில் அண்மையில் திருமண போட்டோ ஷூட் அனுமதி இன்றி எடுக்கப்பட்டு, அது குறித்த புகார் மதுரை கோட்ட மேலாளரிடம் சென்றதை அடுத்து, தற்போது வழிகாட்டு நெறிமுறைகளோடு மதுரை ரயில்வே கோட்ட நிர்வாகம் ட்விட்டரில் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அது மட்டுமல்லாமல், மதுரை ரயில்வே கோட்டம் தவிர மற்ற ரயில் நிலையங்களில் வெட்டிங் போட்டோஷூட் எடுப்பதற்கான முறையான வழிகாட்டு நெறிமுறைகள் இதுவரை வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இது போன்ற அனுமதியின் வாயிலாக திருமணமான மணமக்கள் தங்களது போட்டோஷூட்டை முறையான அனுமதி பெற்று ரயில்வே வளாகங்களில் நடத்திக் கொள்ளலாம். இந்த அறிவிப்பு இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
இதையும் படிங்க: தேசிய விளையாட்டு போட்டி விவகாரம்: தமிழ்நாடு முதன்மை மாநில உடற்கல்வி ஆய்வாளர் சஸ்பெண்ட்!