மதுரை: திருநெல்வேலி பாளையங்கோட்டையைச் சேர்ந்த தெய்வகனி உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் ஆட்கொணர்வு மனுவினைத் தாக்கல்செய்திருந்தார். அதில், "எனது கணவர் அண்ணாதுரை மகாராஷ்டிராவில் சி.ஆர்.பி.எஃப். பாதுகாப்புப் படையில் பணிபுரிந்தார்.
மகாராஷ்டிராவிலிருந்து சண்டிகர் பகுதிக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். பணியிட மாற்றம் செய்யப்பட்ட நிலையில் 20 நாள்கள் விடுமுறை எடுத்து திருநெல்வேலி வந்தார். 20 நாள்கள் விடுமுறை முடிந்து 2019 ஜூன் 29ஆம் தேதி திருக்குறள் விரைவு ரயிலில் சண்டிகர் சென்றார்.
2019 ஜூலை 1ஆம் தேதி டெல்லி வந்துவிட்டதாக போனில் பேசினார். ஜூலை 2ஆம் தேதி வாட்ஸ்அப்பில் பேசினார்.
அதன் பிறகு எந்தத் தொடர்பும் இல்லை. ஜூலை 2ஆம் தேதி டெல்லியிலிருந்து எஸ்.ஐ. பிரோத் குமார் என்னை போனில் தொடர்புகொண்டு தங்கள் கணவரது பொருள்கள் வந்துள்ளன. ஆனால் கணவர் வரவில்லை எனத் தகவல் கூறினார்.
எனது கணவர் எங்கு உள்ளார் என்ற தகவல் தெரியாததால் நானும் எனது குழந்தைகளும் மிகுந்த மன உளைச்சலுடனும், கவலையுடனும் உள்ளோம். எனவே சி.ஆர்.பி.எஃப். பாதுகாப்புப் படையில் பணிபுரியும் எனது கணவரை கண்டுபிடித்து ஒப்படைக்க உத்தரவிட வேண்டும்" எனக் கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் பாரதிதாசன், நிஷா பானு அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த வழக்கில் சிபிஐக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு வழக்கை ஆகஸ்ட் 24ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.
இதையும் படிங்க: கொடைக்கானலில் அனுமதியின்றி கூடாரம் அமைத்த 20 பேர் மீது வழக்கு