மதுரை: கன்னியாகுமரி மாவட்டம், தக்கலையைச் சேர்ந்த ஸ்ரீபதி ராஜு என்பவர், உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். அதில், "கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள 490 கோவில்கள், இந்து சமய அறநிலையத் துறையின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ளன. சுசீந்திரத்தில் உள்ள இந்து சமய அறநிலையத்துறையின் அலுவலகம், குமரி மாவட்ட கோவில்களுக்கான தலைமை அலுவலகமாக கருதப்படுகிறது. இணை ஆணையரின் கட்டுப்பாட்டின் கீழ் 35 அலுவலர்கள், 400 அர்ச்சகர்கள் மற்றும் அலுவலர்கள் பணியாற்றி வருகின்றனர்.
கோவில் நிதியை முறைகேடு செய்ததாக, கோவில் ஊழியர்கள் பலர் மீது லஞ்ச ஒழிப்பு துறையினரால் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இது தொடர்பாக நாளிதழ்களிலும் செய்திகள் வெளியாகின. அவ்வாறு வழக்குப்பதிவு செய்யப்பட்ட பலர் தற்போது பணியில் உள்ளனர். குறிப்பாக இந்து சமய அறநிலையத்துறையில் தூத்துக்குடி மண்டல இணை இயக்குனர் அன்புமணி, கன்னியாகுமரி மாவட்ட கோவில்களின் கண்காணிப்பாளர் ஆனந்த், கன்னியாகுமரி மாவட்ட கோவில்களின் மராமத்து மேற்பார்வையாளர் அய்யப்பன், பகவதி அம்மன் கோவிலின் மேலாளர் செந்தில்குமார் ஆகியோர் தற்போதும் பணியாற்றி வருகின்றனர்.
அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி பலமுறை மனு அளித்தும், நடவடிக்கை இல்லை. ஆகவே குற்றம் சுமத்தப்பட்டவர்கள் மீது, குற்றவியல் நடவடிக்கை எடுக்கவும், வழக்கை முறையாக விசாரித்து நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட வேண்டும்" என கோரியிருந்தார்.
இந்த வழக்கு இன்று நீதிபதிகள் மகாதேவன், சத்திய நாராயண பிரசாத் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், குமரி மாவட்ட கோவில் ஊழியர்கள் சிலர் மீது சிபிஐ விசாரணை நிலுவையில் உள்ளது, சிலர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது, அப்படி இருக்கையில் அவர்கள் எவ்வாறு பணியில் தொடர்கிறார்கள்? என கேள்வி எழுப்பினர். இது குறித்து, இந்து சமய அறநிலையத்துறையின் ஆணையரிடம் உரிய விளக்கம் பெற்றுத் தெரிவிக்க அரசுத் தரப்புக்கு உத்தரவிட்டு, வழக்கை வரும் 30ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.