மதுரையை சேர்ந்த விரோனிகா மேரி என்பவர் உயர் நீதிமன்றம் மதுரைக் கிளையில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், "தமிழ்நாட்டில் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி என 7ஆயிரத்து72 கி.மீ., பரப்பளவு உள்ளது. இதில் 5 தேசிய பூங்காக்கள், 15 வன உயிரினங்கள் பூங்கா என ஏராளமான பூங்காக்கள் உள்ளன.
மேலும், வன உயிரினங்களுக்கான பாதுகாக்கப்பட்ட பகுதியாக ஆணமலை, களக்காடு, முதுமலை, சத்தியமங்கலம் ஆகிய பகுதிகள் உள்ளன. மேலும் சில வனப்பகுதிகளில் மிகவும் அரிதான தாவரங்கள், பறவைகள், கால்நடைகள், மீன் வகைகள் போன்றவை உள்ளன.
ஆனால், தமிழ்நாட்டில் வனவிலங்கு பாதுகாக்கும் முன் பணியாளர்களான வனப்பாதுகாவலர், வன பார்வையாளர் ஆகியவை அதிகப்படியாக காலியாக உள்ளது. தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கொடுக்கப்பட்ட தகவலின்படி தமிழ்நாட்டில் 248 முன்களப் பணியாளர்கள் பணி காலியாக உள்ளது தெரியவந்துள்ளது.
இதனால், தேசிய வனவிலங்கு செயல் திட்டம் 2017 - 2031 சரிவர அமல்படுத்த முடியாத சூழ்நிலை உருவாகியுள்ளது. இதனால் வன விலங்குக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்த வண்ணம் உள்ளது. இது குறித்து மின்னஞ்சல் மூலம் புகார் அளித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
எனவே, வனப் பாதுகாவலர் மற்றும் வன பார்வையாளர் காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப உத்தரவிடவும், தேசிய வனவிலங்கு செயல்திட்டம் 2017 - 2031 முறையாக அமல்படுத்தவும் உத்தரவிட வேண்டும்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த மனு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஆனந்தி ஆகியோர் முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதிகள் வழக்கு குறித்து தமிழ்நாடு சுற்றுச்சூழல் மற்றும் வனத் துறை முதன்மை செயலர் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை பிப்ரவரி 23ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
இதையும் படிங்க: ஈடிவி பாரத் செய்தி எதிரொலி: சிகிச்சை அளிப்பதற்கு காட்டெருமையைத் தேடும் வனத் துறை!