மதுரை: தூத்துக்குடியைச் சேர்ந்த விஜயகுமார் என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல மனு ஒன்று தாக்கல் செய்திருந்தார்.
அதில், தமிழ்நாட்டில் ஹாக்கி விளையாட்டை ஊக்குவிக்கும் வகையில் மாநிலம் முழுவதும் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஹாக்கி அசோசியேஷன் உள்ளது. இதிலிருந்து சிறப்பாக விளையாடும் ஹாக்கி வீரர்களைத் தேர்ந்தெடுத்து மாவட்ட மற்றும் மாநில அளவிலான ஹாக்கி அணிக்குப் பரிந்துரை செய்யப்படும்.
ஒவ்வொரு மாவட்டத்திலும் செயல்படும் ஹாக்கி கிளப் அந்தந்த மாவட்டத்தில் உள்ள முக்கியப் பிரமுகர்கள் மூலம் ஒருங்கிணைக்கப்படுகிறது. ஹாக்கி கிளப்பின் விதியின் படி மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல் நடத்தப்பட வேண்டும். ஆனால், ஒரு சில ஹாக்கி கிளப்பை தவிர்த்து மற்ற ஹாக்கி கிளப்புகளில் தேர்தல் நடத்தப்படுவதில்லை. மேலும் சில ஹாக்கி கிளப்பில் அரசியல் பிரமுகர்கள் தலையீட்டின் கீழ் செயல்படுகிறது. இதனால் ஹாக்கி அணிக்கு வீரர்களைத் தேர்வு செய்வதில் ஒருதலைப்பட்சமாக சிலர் செயல்படுகிறார்கள்.
இதைத் தவிர்ப்பதற்கு தமிழ்நாட்டில் உள்ள அனைத்து ஹாக்கி கிளப்களிலும், விதியின் படி மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நடத்தி, ஒருங்கிணைப்பாளர்களைத் தேர்வு செய்து, அதன் அடிப்படையில் ஹாக்கி வீரர்களைத் தேர்வு செய்து மாவட்டம் அல்லது மாநில ஹாக்கி அணிக்குப் பரிந்துரை செய்ய வேண்டும். மேலும் விதியின் படி தேர்தல் நடத்துவதற்கு ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதி கண்காணிப்பின் கீழ் தேர்தல் நடத்த உரிய உத்தரவை பிறப்பிக்க வேண்டும் எனத் தெரிவித்திருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் புஷ்பா சத்யநாராயணன், வேல்முருகன் அமர்வில் இன்று(நவ.10) விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கு குறித்து தமிழ்நாடு அரசு பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை நான்கு வாரங்களுக்கு ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இதையும் படிங்க: 'சோ' வென்று பெய்த மழை நீரில் 'ஜோ' போல் குளித்த நபர்