மதுரை: திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையைச் சேர்ந்த கோட்டை ராஜா, முத்துப்பாண்டி ஆகிய இருவரும் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்துள்ளனர்.
அதில், "கடந்த 14ஆம் தேதியன்று, வத்தலக்குண்டு அருகே உள்ள மேலக்கோவில்பட்டியில் உள்ள புனித சவேரியர் தேவாலயத்தின் மீது யாரோ, பெட்ரோல் வெடிகுண்டை வீசியுள்ளனர். இதில் ஆலயத்தின் முன்பகுதி சேதமடைந்தது.
இது குறித்து தேவாலயத்தின் அருட்தந்தை ஜெயராஜ் அளித்த புகாரின்பேரில், வத்தலக்குண்டு காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
புகாரில், அடையாளம் தெரியாத நபர்கள் என வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில், எங்கள் மீது காவல் துறையினர் சந்தேகப்பட்டு எங்களைத் தேடிவருவதாகத் தெரிகிறது. எங்களுக்கும், இந்தச் சம்பவத்திற்கும் எவ்வித சம்பந்தமுமில்லை. எனவே இந்த வழக்கில் எங்களுக்கு முன் பிணை வழங்க வேண்டும்" எனக் குறிப்பிட்டிருந்தனர்.
இந்த மனு நீதிபதி பாரதிதாசன் முன் இன்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி வழக்கு விசாரணையை, வரும் செப்டம்பர் 29ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.
இதையும் படிங்க: இந்திய முறை மருத்துவர்களுக்கு ஊதிய உயர்வு வழக்கு: நகராட்சி நிர்வாகத்துறை செயலருக்கு உத்தரவு