மதுபானங்களை டோர் டெலிவரி செய்யக் கோரி வழக்கு - மனுதாரருக்கு ரூ. 50 ஆயிரம் அபராதம் - Case for Door Delivery of Liquors
மதுரை: மனமகிழ் மன்ற உறுப்பினர்கள், விருந்தினர்களுக்கு தேவையான மதுபான வகைகளை டோர் டெலிவரி செய்ய அனுமதிக்க உத்தரவிட கோரிய மனுவை தள்ளுபடி செய்தும், மனுதாரருக்கு ரூ. 50 ஆயிரம் அபராதம் விதித்தும் உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
மனுதாரருக்கு ரூ. 50 ஆயிரம் அபராதம்
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் மேட்டுப்பட்டி ஸ்டார் மனமகிழ் மன்றத் தலைவர் ரவிகண்ணன், உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.
அந்த மனுவில், "கரோனா வைரஸ் தொற்றால் எங்களது கிளப் மூடப்பட்டுள்ளது. 50 நாட்களுக்கு மேலாக கிளப் மூடப்பட்டுள்ளதால், உறுப்பினர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். எங்களது மதுபானக் கூடத்தில் ஏற்கனவே ஸ்டாக் உள்ள மதுபாட்டில்கள் வீணாகும் நிலை ஏற்பட்டுள்ளது.
சங்க உறுப்பினர்களுக்கு விநியோகிக்க அனுமதித்தால், மதுபானங்கள் வீணாவதை தவிர்க்க முடியும். எனவே, எங்கள் மனமகிழ் மன்ற உறுப்பினர்கள், விருந்தினர்களுக்கு தேவையான மதுபான வகைகளை ஆன்லைன், டோர் டெலிவரி செய்ய அனுமதிக்குமாறு உத்தரவிட வேண்டும்" இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனுவை காணொலி காட்சி மூலம் விசாரித்த நீதிபதி சி.வி.கார்த்திகேயன், மனுவை தள்ளுபடி செய்தார். மேலும், மனுதாரருக்கு ரூ. 50 ஆயிரம் அபராதம் விதித்தார். அதை முதலமைச்சரின் கரோனா நிவாரண நிதிக்கு செலுத்த வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: செக் மோசடி வழக்கு - உயர் நீதிமன்றம் விளக்கம்!