மதுரை: தேனி மாவட்டம் பெரியகுளம் தென்கரை பகுதியில் அமைந்துள்ள பெரியகுளம் கண்மாயில் சட்டத்திற்குப் புறம்பான ஆக்கிரமிப்புகள் குறித்து மணி என்பவர் உயர் நீதிமன்றம் மதுரைக் கிளையில் மனு தாக்கல்செய்திருந்தார்.
அம்மனுவில், “தேனி மாவட்டம் பெரியகுளம் தென்கரை, பகுதியில் அமைந்துள்ள பொதுப்பணித் துறை கட்டுப்பாட்டில் உள்ள பெரியகுளம் கண்மாயில் கடந்த 60 ஆண்டுகளுக்கு மேலாக சமூக விரோதிகள் ஆண்டுக்கு குறைந்தது 5 ஏக்கர் அளவில் தற்போது வரை தோராயமாக 200 முதல் 250 ஏக்கர் வரை ஆக்கிரமித்துள்ளனர்.
இது சம்பந்தமாக பல ஆண்டுகளாக எங்களது தென்கரை விவசாயிகள் சங்கத்தின் சார்பாக பெரியகுளம் கண்மாயில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி சமூக விரோதிகளிடமிருந்து கண்மாயினை மீட்டுத்தர வேண்டிப் பொதுப்பணித் துறை அலுவலர், மாவட்ட ஆட்சிதலைவரிடம் நேரடியாகச் சென்று மனு கொடுத்துள்ளோம்.
ஆனால் தற்போதுவரை அதற்கான எந்த ஒரு அடிப்படை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவில்லை. எனவே, பெரியகுளம் கண்மாயின் ஆக்கிரமிப்பு நிலங்களை மீட்க வேண்டும்” எனக் குறிப்பிட்டிருந்தனர்.
இந்தப் பொதுநல வழக்கு நீதிபதிகள் துரைசாமி, முரளி சங்கர் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், இது குறித்து தேனிமாவட்ட ஆட்சியர், பொதுப்பணித் துறையின் மதுரை தலைமைப் பொறியாளர் உள்ளிட்டோர் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை நவம்பர் மாதம் 12ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
இதையும் படிங்க: வனத்தைப் பாதுகாப்பது அவசியம் - உயர் நீதிமன்றம்