மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக மாவட்ட கரோனா தடுப்புக் கண்காணிப்பு அலுவலர் சந்திரமோகன் தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் த. அன்பழகன், மதுரை மாநகராட்சி ஆணையர் விசாகன், அரசு இராசாசி மருத்துவமனை முதல்வர் சங்குமணி உள்ளிட்ட அரசுத் துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
இதனையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த சந்திரமோகன், "மதுரையில் இரண்டாம்கட்ட கரோனா அலை காரணமாகத் தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துவருகிறது. கரோனா தடுப்பு நடவடிக்கையாக மாவட்டம் முழுவதிலும் காய்ச்சல் முகாம்களை நடத்திவருகிறோம்.
இரண்டாம் கரோனா அலையால் குறைந்த காலத்தில் நோயாளிகளின் பாதிப்பு அதிகரிக்கிறது. புதிய மரபணு மாற்ற வழிமுறைகளின் மூலம் தொற்று அதிகரிக்கிறதா என்பது குறித்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.
இதற்கான தீர்வு முகக்கவசம், தகுந்த இடைவெளிதான். மதுரை மாவட்டத்தில் முகக்கவசம் அணியாத, தகுந்த இடைவெளியைப் பின்பற்றாத நபர்களிடமிருந்து கடந்த 11 நாள்களில் எட்டு லட்சத்து 75 ஆயிரத்து 600 ரூபாய் வசூலிக்கப்பட்டுள்ளது.
அதிக கூட்டம் கூடுவதைத் தவிர்க்க வேண்டும், வீட்டிலிருந்து வெளியில் வரும்போது முகக்கவசம் கட்டாயம், கரோனா பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனுக்குடன் சிகிச்சை வழங்க இரண்டாயிரம் படுக்கைகளுடன் கூடிய அரசு மருத்துவமனைகள் தயார் நிலையில் உள்ளன. மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் கரோனா தனிமைப்படுத்தப்பட்ட கண்காணிப்பு முகாம் அமைக்கப்பட்டுள்ளது.
கரோனா தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு கரோனா பாதிப்பு உள்ளதா என்பது குறித்து புனே ஆய்வு மையத்தில் ஆய்வுகளுக்காக அனுப்பிவைத்துள்ளோம். 45 வயதிற்கு மேற்பட்டவர்கள் மதுரை மாவட்டத்தில் தடுப்பூசி செலுத்திக்கொள்ளலாம்" என்றார்.