மதுரை புதூர் பகுதியைச் சேர்ந்தவர் சுல்தான் அலாவுதீன். இவர் நேற்று அதே பகுதியில் உள்ள ஏடிஎம் மையத்திற்கு காரில் பணம் எடுக்கச் சென்றுள்ளார். அப்போது காரை ஏடிஎம் மையத்தின் வாசலில் நிறுத்திவிட்டு, பணம் எடுக்க சென்றதை நோட்டமிட்ட அடையாளம் தெரியாத நபர்கள் அவரது காரை திருடிச் சென்றனர். பணத்தை எடுத்துவிட்டு வெளியே வந்து அலாவுதீன் பார்த்த போது தனது காரை இருவர் எடுத்துச் செல்வதை கண்டு அதிர்ச்சியடைந்து அவர்களை காரை விரட்டிச் சென்று பிடிக்க முயற்சித்த போது தவறி விழுந்ததில் காயமடைந்தார்.
இந்நிலையில், அந்தக் காரை ஓட்டிச் சென்ற அடையாளம் தெரியாத நபர்கள் அமைச்சர் செல்லூர் ராஜு வீட்டு வாசலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரின் மீது மோதி விபத்தை ஏற்படுத்தினர். இதனை தொடர்ந்து அமைச்சர் வீட்டில் பாதுகாப்பு பணியில் இருந்த காவல்துறையினர் இரண்டு நபர்களையும் பிடித்து விசாரித்தபோது, அவர்கள் இருவரும் செல்லூர் பகுதியைச் சேர்ந்த தங்கமலை, வினோத் என்பதும், மது போதையில் காரை திருடிவிட்டு தப்ப முயன்றதும் தெரியவந்தது.
இதனையடுத்து, காவல்துறையினர் இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். போதையில் காரை திருட முயன்று விபத்து ஏற்படுத்தி சிக்கிக்கொண்ட சுவாரஸ்ய சம்பவம் மதுரையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.