ஜல்லிக்கட்டு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீதான வழக்கு மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. அதில் ஆஜராவதற்காக வந்திருந்த சூழலியல் செயல்பாட்டாளர் முகிலன் பத்திரிகையாளர்களைச் சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், கடந்த 2017ஆம் ஆண்டு ஜல்லிக்கட்டு உரிமைக்காக தமிழ்நாடு முழுவதும் போராட்டம் நடைபெற்றது. அப்போராட்டத்தில் ஈடுபட்ட 140 பேர் மீது கடந்த இரண்டு ஆண்டுகளாக வழக்குகள் நடைபெற்று வருகின்றன.
இந்த வழக்குகள் அனைத்தையும் தமிழ்நாடு அரசு ரத்து செய்ய வேண்டும் எனவும், கடந்த ஊரக உள்ளாட்சித் தேர்தலில் ஆளும் அதிமுக அரசு எவ்வாறு தோல்வியை சந்தித்ததோ அதேபோன்று வருகின்ற மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி தேர்தலிலும் தோல்வியைச் சந்திக்கும் நிலை ஏற்படும் என்றும், எங்கள் மீதான வழக்குகளை வாபஸ் பெறாவிட்டால் நாங்கள் அதிமுக அரசுக்கு எதிராக தேர்தலில் பிரச்சாரம் மேற்கொள்வோம் எனவும் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், தற்போது ஊரக உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்ற ஊராட்சித் தலைவர்கள், ஒன்றிய உறுப்பினர்கள், மாவட்ட ஊராட்சி உறுப்பினர்கள் அனைவரும் சேர்ந்து அவரவர் ஊராட்சியில் ஜல்லிக்கட்டு போராட்டத்தில் ஈடுபட்டோர் மீதான வழக்கை கைவிட தீர்மானம் இயற்ற வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், ஒட்டுமொத்த தமிழ்நாட்டையும், பாலைவனமாக்க வேண்டும் என்பதற்காகவே ஹைட்ரோ கார்பன், மீத்தேன் திட்டங்களுக்காக மக்களிடம் கருத்து கேட்க தேவையில்லை, சுற்றுச்சூழல் அனுமதியும் தேவையில்லை என்று மத்திய அரசு முடிவெடுத்திருக்கிறது எனவும்,
காவிரி படுகை பாசன பகுதியை பாலைவனமாக்கும் மத்திய அரசின் செயல் திட்டத்தின் ஒரு பகுதியாகத்தான் கர்நாடகா மேகதாது அணை கட்டுவதை அனுமதித்துள்ளது. இந்த அணையைக் கட்டினால் காவிரியில் ஒரு சொட்டு தண்ணீர் கூட வராது. பிறகு இங்கே ஹைட்ரோகார்பன், மீத்தேன் போன்ற திட்டங்களை மிக எளிதாக செயல்படுத்த முடியும். இப்பகுதியில் 300 லட்சம் கோடி பெருமானமுள்ள நிலக்கரி வளம் உள்ளதாகவும், அதனை சுரண்டி எடுப்பதற்கு தான் மத்திய அரசு தொடர்ந்து முயற்சி மேற்கொண்டிருக்கிறது எனவும் அவர் தெரிவித்துள்ளர்.
இதையும் படிங்க: கார்த்தி சிதம்பரம் மீது குற்றச்சாட்டு பதிவு செய்ய இடைக்கால தடை