மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே மதுரை-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் விராலிபட்டி என்ற இடத்தில் சொகுசு கார் ஒன்று தீப்பிடித்து எரிவதாக வாடிப்பட்டி தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் கிடைத்தது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்துசென்ற தீயணைப்புத் துறையினர் தீயை அணைத்தனர்.
முதல்கட்ட விசாரணை
பின்னர் காரை திறந்து பார்த்தபோது காருக்குள் தீயில் எரிந்த நிலையில் ஆண் சடலம் கிடந்தது. இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் மேற்கொண்ட முதல்கட்ட விசாரணையில், காரில் எரிந்த நிலையில் கிடந்தவர் மதுரை ஐயர் பங்களா பகுதியைச் சேர்ந்த சிவானந்தம் (58) என்பதும், அவர் மதுரையில் உள்ள தனியார் நிறுவனமான மகாசேமம் நிறுவனத்தின் உரிமையாளர் என்பதும் பழனி சென்றுவிட்டு மதுரை திரும்புகையில் வாடிப்பட்டி அருகே இந்தச் சம்பவம் நடைபெற்றதும் தெரியவந்தது.
இது குறித்து தகவலறிந்த மதுரை சரக டிஐஜி ராஜேந்திரன், மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜித்குமார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை நடத்தினர்.