இந்திய துணைக்கண்டம் எண்ணற்ற சமய மரபுகளை உலகிற்கே தந்துள்ளது. அதன் காரணமாகவே இங்கு ஞானிகளும் யோகிகளும் தாங்கள் உணர்ந்த விஷயங்களை தங்களது வழித்தோன்றல்களுக்கு தத்துவங்களாக மரபுகளாக சமயங்களாக சிந்தனைகளாக வழங்கி விட்டுச்சென்றனர்.
அந்த தத்துவ மரபுகளில் ஒன்றாகப் போற்றப்படும் பௌத்தம், இந்திய மண்ணில் தோன்றி உலகமெலாம் விரிந்து பரவியது. அரச குடும்பத்தில் பிறந்து, பின்னர் மக்களின் வாழ்வியலிலிருந்து தான் கற்றுணர்ந்தவற்றை, போதி மரத்தின் கீழிருந்து மேற்கொண்ட தவத்தின் பயனாய், தன்னை புத்தராக மாற்றிக் கொண்டவர்தான், இளவரசர் சித்தார்த்தர். ஆசையே துன்பத்திற்குக் காரணம் என்பதை ஊருக்கு உணர்த்திய புத்தம், இந்தியாவிலும் பல்வேறு இடங்களில் கிளை பரப்பத் தொடங்கியது.
புத்த சமயத்தில் யானைக்கு முக்கிய இடம் உண்டு. அறிவு என்ற பண்பின் அடையாளமாக, அங்கே யானை போற்றப்பட்டு வணங்கப்படுகிறது. விநாயகர் சதுர்த்தி இந்தியா முழுவதும் கொண்டாடப்படும் நிலையில், புத்த மரபைப் பின்பற்றி வாழும் விவசாயியும் மதுரை மாவட்டம் ஊர்மெச்சிகுளம் அருகேயுள்ள ஆலாத்தூர் என்ற கிராமத்தில் புத்தர் கோவில் கட்டி வழிபாடு செய்து வரும் சந்திரபோஸ் ஈடிவி பாரத் தமிழ்நாடு ஊடகத்திற்கு சிறப்பு நேர்காணல் வழங்கினார்.
அப்போது அவர், 'தனக்கு குழந்தைப் பேறு இல்லையென்கின்ற காரணத்தால் புத்தரின் தாயார் மாயாதேவி, கைலாய மலைக்குச்சென்று அங்குள்ள மானசரோவர் ஏரியை வணங்கி வலம் வருகிறார். அச்சமயம் ஐராவதம் என்று அழைக்கக்கூடிய வெள்ளை யானையும் அந்த ஏரியை வலம் வருவதை அவரும் கண்டுள்ளார்.
பிறகு அதனை வழிபட்டு லும்பினிக்கு வந்து இரவு உறங்கும்போது, அந்த வெள்ளை யானை ஒன்று தனது வயிற்றுக்குள் சென்றதாக கனவு காண்கிறார். இதுகுறித்து மன்னரிடம் மாயாதேவி முறையிடும்போது, அவருக்கு மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. அப்போது மாயாதேவி கருத்தரித்துள்ளது தெரியவந்தது. அதற்குப் பிறகு 10ஆவது மாதத்தில், தனது தாயாரின் வீட்டிற்குச்செல்லும் வழியிலேயே மாயாதேவிக்கு ஆண் குழந்தை பிறக்கிறது. அந்தப் பிரசவம் நிகழ்ந்த இடம் ஒரு அரசமரத்தின் அடிப்பகுதியாகும்.
புத்தருக்கும் யானைக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதாக பௌத்த மரபுக் கதைகள் கூறுகின்றன. அதேபோன்று பிற்காலத்தில் அவருக்கு அரசமரத்தின் கீழேதான் ஞானம் உண்டாகிறது. அரசமரமும் கூட புத்தரின் வரலாற்றோடு பின்னிப் பிணைந்துள்ளது. ஆனால், இந்த வரலாறெல்லாம் நமக்குக் கற்பிக்கப்படவில்லை.
வீரத்துறவி விவேகானந்தர் சிகாகோ மாநருக்கு சொற்பொழிவாற்ற சென்றிருந்த நிலையில், அவரிடம் புத்தர் பிறந்த நாட்டிலிருந்து வந்திருக்கிறீர்கள், ஆகையால் அது குறித்து சொல்லுங்கள் எனக் கேட்டார்கள். அதற்கு விவேகானந்தர் நான் பௌத்தன் இல்லை என்று கூறுகிறார்.
ஒரு கணம் எல்லோரும் அதிர்ச்சியடைகிறார்கள். அதற்குப் பிறகு அவர், நான் உண்மையான பௌத்தன். வெறும் பௌத்தனில்லை என்று சொல்லிவிட்டு இந்திய தத்துவ மரபின் வளமான கூறுதான் பௌத்தம் என்றார்.
தற்போது நாம் கொண்டாடவிருக்கும் விநாயகர் சதுர்த்தி தினம், புத்த பெருமானோடு தொடர்புடையதுதான். கி.பி.6 ஆம் நூற்றாண்டிற்குப் பிறகுதான் விநாயகர் வழிபாடு இங்கு காலூன்றியது என்கிறார், மறைமலையடிகள். அரசமரம், குளத்தங்கரை, புத்தர் ஆகியவற்றோடு ஒப்பிட்டுநோக்கும்போது புத்தரும் விநாயகரும் வேறு வேறல்லர். விநாயகரும் புத்தர் பெருமானும் ஒரு அவதாரமாகக்கூட இருக்கலாம் என நான் கருதுகிறேன்' என்றார்.
பல்வேறு சமய மரபுகளின் கூறுகளை உள்வாங்கியே இந்து மதம் மிகப் பெரிதாக வளர்ந்துள்ளது. அதைப் போன்றே விநாயகர் வழிபாடும் இங்கே தொடங்கப்பட்டிருக்க வேண்டும் என்பது அறிஞர்கள் பலரின் முடிவு. அந்த வகையில் பௌத்தம் பிள்ளையார் வடிவிலும்கூட இங்கே தொடர்ந்து இயங்கிக் கொண்டிருக்கிறது என்றே சொல்லலாம்’ என்றார்.
இதையும் படிங்க: சுற்றுச்சூழல் மேம்பாட்டிற்காக தயாராகும் மதுரை சிறைக் கைதிகளின் விதைப் பிள்ளையார்...