பாஜகவின் மாநில கூட்டத்தில் பங்கேற்க வந்த அக்கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் முரளிதர ராவ் மதுரை விமானநிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில் "காஷ்மீர் பிரச்னையில் மத்திய அரசு தற்போது நிரந்தர தீர்வினை எட்டியுள்ளது. 370-ஐ ரத்து செய்ததன் மூலம் அங்குள்ள பழங்குடியின மக்களுக்கு இடஒதுக்கீடு கிடைக்கும். தமிழ்நாட்டில் பெண்களுக்கு கிடைக்கும் சொத்துரிமையைப் போல் காஷ்மீரில் உள்ள பெண்களுக்கு சொத்துரிமை கிடைக்கும்.
இதன் மூலம் காஷ்மீரில் வாழும் பழங்குடியின மக்கள், பெண்களின் உரிமையை மோடி அரசு உறுதிசெய்துள்ளது. பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் காஷ்மீர் விவகாரம் பற்றி உலகநாடுகளிடையே பொய் பரப்புரை செய்கிறார்.
காஷ்மீர் விவகாரத்தையும், திமுகவின் இரட்டை நிலைப்பாடையும் தமிழ்நாட்டில் வீடுதோறும் சென்று பரப்புரை செய்ய முடிவு செய்துள்ளோம். தற்போது தென்னிந்தியாவில் பாஜக சிறப்பானதொரு வளர்ச்சியை அடைந்துள்ளது" என்றார்.