மதுரையைச் சேர்ந்த பிரபாகரன், கஞ்சா கடத்திய வழக்கில் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் உள்ளார். இவர் மீது 300 கிலோ கஞ்சா கடத்தலுக்கு உதவி செய்ததாக, போதை தடுப்பு பிரிவு சிறப்பு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கில் தனக்கு ஜாமீன் வழங்க கோரி, பிரபாகரன் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனுவை விசாரணை செய்த நீதிபதி புகழேந்தி, ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தார். ஆனால் மீண்டும் பிரபாகரன் தரப்பில், ஜாமீன் வழங்க கோரி மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டதால், மீண்டும் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் புதிதாக மனு தாக்கல் செய்தார்.
அந்த மனுவில் பழைய விவரங்களை மறைத்து புதிதாக தாக்கல் செய்வது போல குறிப்பிட்டுள்ளார். இந்த விவரங்களை அறியாத நீதிமன்றம், பிரபாகரனுக்கு ஜாமீன் வழங்கி உத்தரவு பிறப்பித்தது. ஆனால், இந்த வழக்கின் உண்மை நிலையை அறிந்த அரசு வழக்கறிஞர் செந்தில்குமார், நீதிபதி புகழேந்திக்கு தகவல் அளித்துள்ளார்.
எனவே பிரபாகரன் வழக்கு, நீதிபதி புகழேந்தி முன்பாக மீண்டும் பட்டியலிப்பட்டது. பின்னர் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், நீதிமன்ற உத்தரவுகளை மறைத்து தாக்கல் செய்யப்பட்ட மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி புகழேந்தி உத்தரவிட்டார்.
மேலும், “கீழமை நீதிமன்றங்களில் விசாரணை செய்யப்படும் வழக்குகளை, முறையாக நீதிமன்ற வலைதளங்களில் (ecourts.gov.in) பதிவிடுவதுமில்லை.
நீதிமன்ற வலைதளங்களை சோதித்த போது பெரும்பான்மையான நீதிமன்றங்கள், வலைதளங்களை பயன்படுத்தப்படாமல் உள்ளது தெரிய வருகிறது. எனவே அனைத்து கிழமை நீதிமன்றங்களில் தினந்தோறும் நடைபெறக்கூடிய அனைத்து வழக்குகளின் நிலைமைகளை, நீதிமன்ற வலைதளமான ecourts.gov.in ல் பதிவேற்றம் செய்யப்பட வேண்டும்.
குறிப்பாக ஜாமீன் மனுக்கள், முன்ஜாமீன் மனுக்கள் மற்றும் தீர்ப்புகள் ஆகியவை உடனடியாக பதிவேற்றம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த உத்தரவை உயர்நீதிமன்ற பதிவாளர், அனைத்து கீழமை நீதிமன்றங்களுக்கும் அனுப்ப வேண்டும். அதேநேரம் இந்த வழக்கில், வழக்கிற்கு தேவையான அனைத்து ஆவணங்களையும் தந்து உதவிய அரசு வழக்கறிஞர் செந்தில்குமாருக்கு நீதிமன்றம் தனது பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறது” என்று நீதிபதி புகழேந்தி விரிவான உத்தரவை பிறப்பித்தார்.
இதையும் படிங்க: போலீசாரிடம் சிலையை விற்க வந்த கடத்தல்காரர்கள் சிக்கிய கதை..!