மதுரை: கோயம்புத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஹரிஷ். இவர் உயர் நீதிமன்றம் மதுரைக் கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், “திருச்சி மணப்பாறையைச் சேர்ந்த ஆசிரியர் சார்லஸ் மைக்கோல் என்பவர் ஆபாச படம் பார்த்ததாகவும் , இது தொடர்பான வழக்குப்பதிவு செய்யாமல் இருக்க, ஆசிரியரிடம் போலீசார் போல் பேசி ஜிபே (Google Pay) மூலம் பணம் பெற்று மோசடியில் ஈடுபட்டது தொடர்பாக கோவையைச் சேர்ந்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
இதில், மோசடியில் ஈடுபட்டவர்கள், என்னிடம் அவசரமாக பணம் அனுப்பவுள்ளார்கள் என கூறி எனது ஜிபே எண்ணை என் அனுமதியுடன் பயண்படுத்தினர். ஆனால், அது மோசடி பணம் என எனக்கு தெரியாது. எனவே, இதில் எனக்கு எந்த தொடர்பும் இல்லை. நான் கல்லூரியில் படித்து கொண்டு இருக்கிறேன்.
இந்த வழக்கில், திருச்சி சைபர் கிரைம் போலீசார் தன்னை கைது செய்யாமல் இருக்க முன் ஜாமீன் வழங்க வேண்டும்” என மனுவில் குறிப்பிட்டுள்ளார். இந்த வழக்கு நீதிபதி ஜெகதீஸ் சந்திரா முன் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, மனுதாரருக்கு நிபந்தனையுடன் முன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.
மனுதாரர் சாட்சிகளை அழிக்க கூடாது, இரண்டு வாரங்களுக்கு தொடர்புடைய காவல் நிலையத்தில் ஆஜராகி காலை 10:30 மணிக்கு கையெழுத்து இடவேண்டும், தேவைப்படும்போது விசாரணைக்கு வர வேண்டும் உள்ளிட்ட நிபந்தனைகளுடன் நீதிபதிகள் அவருக்கு முன் ஜாமீன் வழங்கினர்.
இதையும் படிங்க: லால்குடி குழந்தை விற்பனையும், 6000 கி.மீ பயணமும்.. சினிமாவை விஞ்சிய பகீர் சம்பவம்!