மதுரை: மனித நேய மக்கள் கட்சி மாநில வழக்கறிஞர் அணியினர் உயர் நீதிமன்றம் மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்தனர். அதில், ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ். மங்கலம் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமத்தில் இருக்கக்கூடிய மக்கள் மீன்பிடித் தொழில் செய்து வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் 259 துணை சுகாதார நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. இவை ஆரம்ப சுகாதார நிலையங்களின் கட்டுப்பாட்டில் இயங்கி வருகின்றன.
இந்நிலையில் ஆர்.எஸ். மங்கலம் மற்றும் அதனை சுற்றியுள்ள 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து பொதுமக்கள் காய்ச்சல் பாம்பு கடி உள்ளிட்ட முதலுதவி சிகிச்சைகள் மற்றும் கர்ப்பிணிகளுக்கான மகப்பேறு சிகிச்சைகளை ஆர்.எஸ் மங்கலம் துணை சுகாதார நிலையத்தில் தான் பெற்று வருகின்றனர். இந்த கட்டடம் கட்டி 30 ஆண்டுகளுக்கு மேலானதால் கட்டடம் தற்பொழுது பலவீனமாக காணப்படுகிறது. தற்போது மேற்கூரைகள் இடிந்து விழுந்து வருகின்றன.
இதனால் இங்கு பணிபுரியக் கூடிய செவிலியர்கள் மருத்துவமனைக்கு வர அஞ்சுகின்றனர். இதனால் துணை சுகாதார நிலையம் பூட்டியே வைக்கும் அவலநிலை உள்ளது. இதனால் இப்பகுதி மக்கள் விபத்து உள்ளிட்ட அவசர சிகிச்சைக்கு திருவாடானை மருத்துவமனைக்குச் செல்ல வேண்டியுள்ளது. இது தொடர்பாக அதிகாரிகளிடம் மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. எனவே அஞ்சுகோட்டை பகுதியில் இருக்கக்கூடிய துணை சுகாதார நிலையத்தினை இடித்து புதிய சுகாதார நிலையம் கட்ட உத்தரவிட வேண்டும்” என மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் வைத்தியநாதன், பரத் சக்கரவர்த்தி ஆகியோர் முன் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை ஏற்கனவே விசாரணை செய்த நீதிமன்றம் ராமநாதபுரம் மாவட்ட முதன்மை நீதிபதி சுகாதார மருத்துவமனை கட்டடத்தை ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு பிறப்பித்து இருந்தனர். அதன் அடிப்படையில் நீதிபதி நேரில் சென்று ஆய்வு செய்த அறிக்கையை தாக்கல் செய்திருந்தார். அதனைப் பார்த்த நீதிபதிகள் மருத்துவ கட்டடம் மோசமான நிலையில் உள்ளதை புகைப்படங்களும் மாவட்ட நீதிபதியின் அறிக்கையும் தெளிவாக காட்டுகிறது. இதுவரை உரிய நடவடிக்கை ஏன் எடுக்கவில்லை? என கேள்வி நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
ஒரு மருத்துவமனை இதுபோல் மோசமான நிலையில் இருந்தால் மருத்துவர்கள் மற்றும் பொதுமக்கள் அங்கே எவ்வாறு மருத்துவம் பார்க்க வருவார்கள்? ஏன் இவ்வளவு நாள் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் உள்ளீர்கள்? என சரமாரியாக கேள்வி எழுப்பினர். பின்னர், மாவட்ட நீதிபதியின் அறிக்கையும் புகைப்படங்களையும் மருத்துவ சுகாதாரத் துறை செயலாளருக்கு அனுப்ப உத்தரவிட்டார். மேலும், இந்த வழக்கு குறித்து உரிய விளக்கம் தெரிவிக்க சுகாதாரத்துறை செயலாளர் வீடியோ கான்ஃபரன்சில் ஜூலை 6 ஆம் தேதி 12 மணிக்கு ஆஜராகி விளக்கம் அளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணை ஒத்திவைத்தனர்.
இதையும் படிங்க:தக்காளியில் ஆண்மை குறைவுக்கு மருந்தா! ஆராய்ச்சியாளர்கள் ஆச்சரியத் தகவல்!