தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ளது நரசிங்கபுரம். இந்தக் கிராமத்தில் சுமார் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். அப்பகுதியில் விவசாயம், கால்நடை வளர்ப்பு ஆகியவையே பிரதான தொழிலாகும். நெல், வாழை, தென்னை, பூக்கள் உள்ளிட்டவைகள் அப்பகுதிகளில் சாகுபடி செய்யப்பட்டு வருகின்றது.
இந்நிலையில், நரசிங்கபுரத்திலிருந்து ஜம்புலிபுத்தூர் செல்கின்ற சாலையை புதுப்பிப்பதற்காகச் சுமார் 52 லட்சம் மதிப்பீட்டில் ஒப்பந்தங்கள் கோரப்பட்டு கடந்த பிப்ரவரி மாதம் பணிகள் தொடங்கப்பட்டது. ஆனால், பணிகள் சரிவர செய்யாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளதால், அச்சாலையில் செல்கின்ற பொதுமக்கள், விவசாயிகள், கால்நடைகள் உள்பட பலர் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், புதிதாக சாலை அமைப்பதாகக் கூறி ஏற்கனவே சரியாக இருந்த சாலையை பெயர்த்து விட்டனர். புதிதாக சாலை அமைக்கப்படாததால் பல்வேறு துயரங்களை சந்தித்து வருகிறோம். பள்ளி செல்லும் மாணவர்கள் நேரத்திற்கு பள்ளிக்கு செல்வதில் கால தாமதம் ஏற்படுகிறது. இதைவிட அவலமான நிலை என்னவென்றால், அவசர காலத்திற்கு மருத்துவமனைக்கு செல்வதிலும் சிக்கலான சூழலை சந்தித்து வருகிறோம், பல உயிரிழப்பு சம்பவங்களும் நடந்துள்ளன என்று சோகத்துடன் தெரிவித்தனர்.
மேலும், நீண்ட நாட்களாக சாலை அமைக்காமல் கிடப்பில் போட்டுள்ள ஜம்புலிபுத்தூர் - நரசிங்கபுரம் சாலையை விரைந்து முடித்து மாணவர்கள், விவசாயிகள் மற்றும் கால்நடைகள் உள்பட அனைவரின் சிரமத்தை தீர்க்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.